தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்த தொடர் தொடங்கியது முதல் அதிரடியாக ஆடி வந்த இந்திய அணியினர் நேற்று இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.




ஷபாலி வர்மா தலைமையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் மைதானத்தில் ஆடி, பாடி அசத்தியுள்ளனர்.






பாலிவுட் திரைப்படம் ஒன்றில் கத்ரீனா கைஃப் – சித்தார்த் மல்கோல்தாரா ஆடிய காலா சஷ்மா பாடலுக்கு மைதானத்திலே அசத்தலான ஆட்டம் ஆடியுள்ளனர். வெற்றி மகிழ்ச்சியில் அனைவரும் தாங்கள் பெற்ற தங்கப்பதக்கத்துடன் இந்த பாடலுக்கு ஆடினர். இந்த வீடியோவை ஐ.சி.சி. தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.




தென்னாப்பிரிக்காவின் சென்வீஸ் பார்க்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 14 ஓவர்களில் 69 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செளமியா 24 ரன்களையும், திரிஷா 24 ரன்களையும் எடுத்தனர்.


இந்திய அணியில் டிடாஸ் சாது, அர்ச்சனாதேவி, பர்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட்டுகளையும், மன்னத், ஷபாலி, சோனம் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்ப்றறினர். முதல் முறை நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக்கோப்பைத் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றி அசத்தியிருப்பதற்கு ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.