எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்றது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 






இதையடுத்து வருகின்ற ஞாயிறுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது மார்ச் 17ம் தேதி அதாவது நாளை இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


போட்டி சுருக்கம்: 


முன்னதாக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, சோபியா டிவைன் சிறப்பாக எதுவும் செய்ய முடிவில்லை. இருவரும் தலா 10 ரன்களுடன் வெளியேறினர். அடுத்த திசா 14 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 14 ரன்களும் எடுத்து வெளியேற, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது. தனியாக ஆளாக 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி மட்டும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 


எல்லிஸ் பெர்ரி 50 பந்துகளில்  8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 66 ரன்கள் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் பெவிலியன் திரும்பினார். இவருக்கு பக்கபலமாக ஜார்ஜியா வேர்ஹாம் கடைசி ஓவர்களில் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து நன்றாக முடித்தார். இதையடுத்து, ஆர்சிபி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. 


மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஹெய்லி மேத்யூஸ், நாட் சீவர் ப்ரண்ட் மற்றும் சைகா இஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். 


கோட்டைவிட்ட மும்பை இந்தியன்ஸ்: 


மும்பை இந்தியன்ஸ் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்தனர். ஹெய்லி மேத்யூஸ் 15 ரன்கள் எடுக்க, யாஸ்திகா பாட்டியா 19 ரன்கள் எடுத்த நிலையில் எல்லிஸ் பெர்ரி பந்தில் அவுட்டானார். 





அதை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்கள் எடுக்க, நாட் சீவர் ப்ரண்ட் 23 ரன்கள் எடுத்திருந்தனர். 


அதே நேரத்தில், அமெலியா கார் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் போராட, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர அலிஸ் பெர்ரி, சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.