மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கின. இதில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகள் எலிமினேட்டரில் மோதவுள்ளன. எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
நேருக்கு நேர்
இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி மூன்று முறையும் பெங்களூரு அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நான்கு போட்டிகளும் லீக் சுற்றில் நடைபெற்றவை. இரு அணிகளும் இதுவரை நாக்-அவுட் சுற்றில் மோதிக்கொண்டது இல்லை. இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதிக்கொள்ளவுள்ளன.
இந்த சீசனில் என்ன நடந்தது?
இந்த சீசனில் நடைபெற்ற லீக் போட்ட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணி மும்பை அணியை 19 ஓவர்களுக்குள் 113 ரன்களில் சுருட்டி வீசியது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டினை இழந்து 115 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதற்கு முன்னர் சந்தித்த மூன்று தோல்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கடந்த சீசனைப் போல் மும்பையும், டெல்லியும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும். பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இம்முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பினை கோப்பையை வெல்லாத அணி பெறும் எனலாம்.
மும்பை அணியின் சாத்தியமான ப்ளேயிங் லெவன்
ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமேலியா கெர், பூஜா வஸ்த்ரகர், எஸ் சஜானா, அமன்ஜோத் கவுர், ஹுமாரியா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சாய்கா இஷாக்
பெங்களூரு அணியின் சாத்தியமான ப்ளேயிங் லெவன்
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி மோலினக்ஸ், எலிஸ் பெர்ரி, சோஃபி டெவின், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வேர்ஹாம், எஸ் மேகனா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாக்கூர்