முல்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த ஆட்டம் நிறைவு பெற செவ்வாய்க்கிழமை அவகாசம் இருந்தும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை நிலைத்துநின்று விளையாட விடாமல், விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்.
இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வென்றது. இரண்டாவது டெஸ்டின் 4ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்த ஷகீல், மதிய உணவு இடைவேளைக்கு முன் ஆட்டமிழந்தார்.
மார்க் வுட் வீசிய 94-வது ஓவரில் 2-வது பந்தை அவர் விளாச முயல, அது பேட்டில் பட்டு லெக் சைடு பகுதியில் பின்னே சென்றது. அதை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். ஆனால், அவர் கேட்ச் பிடிக்கும்போது பந்து தரையில் பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மூன்றாவது நடுவர் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. பல முறை அந்த வீடியோவை மூன்றாவது நடுவர் ரீப்ளே செய்து பார்த்து பின்னர் அவுட் கொடுத்தார். இதையடுத்து, ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாக மாறியது.
இது பாகிஸ்தான் வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது.
இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 202 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்தது.
79 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 64.5 ஓவர்களில் 275 ரன்களை குவித்தது. ஹேரி ப்ரூக் சதம் விளாசினார். டக்கெட் அரை சதம் அடித்தார். கேப்டன் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.
இதையடுத்து, 355 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் தொடங்கியது. செளத் ஷகீல் மட்டும் 94 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக இமாம் உல் ஹக் 60 ரன்கள் எடுத்தார்.
மார்க் வுட் அபாரமாக பந்துவீசி பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவ்வாறாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்களை எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து. ஹேரி ப்ரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் கராச்சி நகரில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.