பிசிசிஐ தனது வருடாந்திர ஒப்பந்த சம்பள பட்டியலில் இருந்து அஜிங்க்யா ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை நீக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட இருக்கும் ஹர்திக் பாண்டியா, தற்போது இருக்கும் சி பிரிவிலிருந்து குரூப் பி பிரிவுக்கு உயர்வு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒப்பந்தம் வகையில் ஆண்டு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குரூப் ’ ஏ பிளஸ்’ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 7 கோடியும், ‘ஏ’ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும் வழங்கப்படும். தொடர்ந்து, பி பிரிவு வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கும் கிரிக்கெட் வாரியத்தில் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக முன்னாள் இந்திய டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே, அனுபவ பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, விக்கெட் கீப்பர் சஹா ஆகியோர் பார்ம் அவுட் காரணமாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் மூவரும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரத்தில், டி20 பார்மேட்டில் உலகளவில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கலக்கிவரும் சூர்யகுமார் யாதவ் தற்போது சி பிரிவில் இருக்கிறார். எனவே வரும் ஒப்பந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவ் பி அல்லது ஏ பிரிவு மாற்றப்படலாம். சுப்மன் கில்லும் சி பிரிவில் இருந்து பி பிரிவு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கடைசி போட்டியில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் சி பிரிவில் சேர்க்கப்பட இருக்கிறார்.