தமிழில் இதுவரை வெளியான படங்களில் நட்பின் இலக்கணத்திற்கு உதாரணமான படம் என்று தமிழ் சினிமா ரசிகர்களைக் கேட்டால், பெரும்பாலான பதிலாக இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான, தளபதி படம். இந்த படத்தில் உள்ள கதாப்பாத்திரங்களான சூர்யா மற்றும் தேவா-வைக் கொண்டாடாத அல்லது ஒப்பிடதா நண்பர்களே கிடையாது.


இப்படி இந்திய கிரிக்கெட்டில் நட்பின் இலக்கணம் எனக் கூறினால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவைக் கூறலாம். இருவரும் இந்திய அணிக்காக மட்டும் இல்லாமல் சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணிக்காகவும் இணைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது மட்டும் இல்லாமல் பல்வேறு போட்டிகளை இந்தியாவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளனர். 


சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தோனியை ’தல’ எனக் கூறியும், சுரேஷ் ரெய்னாவை ’சின்ன தல’ என செல்லப் பெயர்கள் கூறி அழைத்து வந்தனர். இவர்களின் நட்பு இந்த செல்லப்பெயர்கள் ஒரு உதாரணம் என்றால், மற்றொருன்று தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் ரசிகர்கள் மூழ்கி இருக்கும்போது, சுரேஷ் ரெய்னாவும் அடுத்த சில மணி நேரங்களில் தானும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிகழ்வைக்கூட இவர்களின் நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம். 


இது மட்டும் இல்லாமல், அண்மையில் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உணவகம் ஒன்றினைத் தொடங்கினார். அதில் ரெய்னா தானும் மற்றும் தனது நண்பர் தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது  அணிந்திருந்த ஜெர்சியை ஃப்ரேம் போட்டு வைத்துள்ளார். 






இப்படியான நிலையில் தான், சுரேஷ் ரெய்னா ஒரு பேட்டியில் தன்னை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவருடைய திருமணத்திற்கு எப்படி அழைத்தார் என்பதை கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தோனியிடம் இருந்து அழைப்பிதழ் வந்தபோது நான் லக்னோவில் இருந்தேன். என்னை அழைத்த தோனி, நீ எங்கே இருக்க என்றார். நான் லக்னோவில் உள்ளேன் என்றேன். டேராடூனில் கல்யாணம் பண்ணிக்கறேன். யாரிடமும் சொல்லி விடாதே, அமைதியாக எனது திருமணத்தில் கலந்துகொள். உனக்காக காத்திருக்கின்றேன் என்றார். தோனியிடம் இருந்து இந்த அழைப்பு வந்ததும் நான் மிகவும் சாதாரண உடையில் தோனியின் திருமணத்திற்கு கிளம்பிவிட்டேன். தோனியின் திருமணத்திற்கு நான் தோனியின் துணிகளையே அணிந்து சென்றேன்” என அந்த வீடியோவில் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 


தோனியின் திருமணத்திற்கு அவரது சிறந்த நண்பரான ரெய்னா எப்படிச் சென்றார் எனக் கூறியுள்ளார் என்பதால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.