டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்குப் பிறகு, இந்திய அணி இப்போது டிசம்பர் 26 முதல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான டிசம்பர் 26 முதல் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், ஒருநாள் தொடரில் கேஎல் ராகுலும் கேப்டனாக செயல்பட்டு தொடர்களை வென்று கொடுத்தனர். தற்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரானது ரோஹித் சர்மாவின் கையில்தான் உள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் டெஸ்ட் தொடரில் அணிக்கு திரும்புகின்றனர். அனுபவ வீரர்களான சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. எனவே, தற்போது கோலி, ரோகித் போன்ற அனுபவ வீரர்களுடன் சில இளம் வீரர்களும் அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் ஜனவரி 3 முதல் ஜனவரி 7 வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கும் இந்திய அணி வாய்ப்பளித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளார். ருதுராஜ் இல்லாத நிலையில், இந்திய அணி நிர்வாகம் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இஷான் கிஷன் தொடரில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்ற நிலையில், அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் இந்திய அணியில் இடம் பிடித்தார். முகமது ஷமியும் உடற்தகுதி காரணமாக விளையாடவில்லை.
நேரடி ஸ்ட்ரீமிங்:
இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாகப் பார்க்கலாம். இது தவிர, மொபைலில் போட்டியைப் பார்க்கும் பார்வையாளர்கள் போட்டியின் நேரடி ஒளிபரப்பையும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜார்ஜி, டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், மார்கோ ஜான்சன், வியான் முல்டர், டேவிட் பெடிங்ஹாம், டிரெஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வரேனி, நந்த்ரே பெர்கர், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி மற்றும் ககிசோ ரபாடா.