மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக தஹிலா மெக்ராத் 50 ரன்களும், கேப்டன் ஹீலி 38 ரன்கள், மூனி 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.மேலும், சினேகா ராணாவுக்கு 3 விக்கெட்கலும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 406 ரன்களை எடுத்து அசத்தியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 78 ரன்களை குவித்திருந்தார். அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தஹிலா 177 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 45 ரன்களும் எடுத்திருந்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியில் சினே 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். தொடர்ந்து, ராஜேஷ்வர் கெய்க்வாட் மற்றும் ஹர்மன்பிரீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பூஜா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்களை மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்து வெற்றிபெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்திருந்த சினே ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்சில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 38 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரிச்சா அஞ்சனா 13 ரன்களும், ஷெபாலி வர்மா 4 ரன்கள் மட்டுமே எடுத்து தங்கள் விக்கெட்டை விட்டுகொடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. 1977 முதல் இரு அணிகளுக்கும் இடையே 11 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. ஆஸ்திரேலியா நான்கில் வெற்றி பெற்றது. ஆறு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் தற்போது இந்தியா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சாதனை
ஆண்டு | போட்டி முடிவு | இடம் |
---|---|---|
1977 | ஆஸ்திரேலியா 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது | பெர்த் |
1984 | டிரா | டெல்லி |
1984 | டிரா | லக்னோ |
1984 | டிரா | அகமதாபாத் |
1984 | டிரா | மும்பை |
1991 | டிரா | வடக்கு சிட்னி |
1991 | ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது | அடிலெய்டு |
1991 | ஆஸ்திரேலியா ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது | மெல்போர்ன் |
2006 | ஒரு இன்னிங்ஸ் மற்றும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது | அடிலெய்டு |
2021 | டிரா | கர்ராரா |
2023 | இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது | மும்பை |