கிரிக்கெட் வீரர் தோனியின் கார் மற்றும் பைக் கலெக்‌ஷன்ஸ் தொடர்பான வீடியோ, காண்போரை பிரமிக்கச் செய்துள்ளது.


தோனியின் எனும் வாகன பிரியர்:


களத்தில் எதிரணிகளை வீழ்த்தி யாராலும் தகர்க்க முடியாத சாதனைகளை புரிந்து, கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த இந்தியாவையே கர்வம் கொள்ளச் செய்தவர் தோனி. இன்றளவும் அவர் போல ஒரு தலைவன், ஒரு ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர் கிடைக்காமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. கிரிக்கெட் அவரது வாழ்வில் எவ்வளவு முக்கியமான விஷயமோ அதற்கு ஈடானது தான் வாகனங்கள் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடும். இது தோனியின்  ரசிகர்கள் அனைவரும் பெரும்பாலும் அறிந்ததே. ஆனால், தோனி எந்தளவிற்கு வாகன பிரியர் என்பதை உணர்த்தும் விதமான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


தோனியை சந்தித்த வெங்கடேஷ் பிரசாத்:


முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தோனியின் கார் மற்றும் பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ள கட்டடத்திற்குள் சென்று பார்த்து, அங்கிருந்தவற்றை பார்த்து அந்த காட்சியை நம்ப முடியாமல் வியந்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “நான் ஒரு நபரிடம் பார்த்த மிகவும் பைத்தியக்காரத்தனமான உணர்வுகளில் இதுவும் ஒன்று. என்ன ஒரு கலெக்‌ஷன் மற்றும் என்ன ஒரு மனிதன் தோனி. ஒரு சிறந்த சாதனையாளர் மற்றும் இன்னும் நம்பமுடியாத நபர். இது அவரது ராஞ்சி வீட்டில் உள்ள பைக்குகள் மற்றும் கார்களின் சேகரிப்பின் ஒரு பார்வை” என குறிப்பிட்டுள்ளார்.






வாகன தொகுப்பு வீடியோ:


தனது டிவீட்டுடன் சேர்த்து அந்த கட்டடத்தில் தோனியுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றையும் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ளார். அதில் தரை தளத்துடன் சேர்ந்து இரண்டு தளங்கள் முழுவதும் பைக்குகளை அணிவகுத்து நிற்கச் செய்துள்ளார் தோனி. அங்கு விண்டேஜ் கார் மற்றும் பைக்குகளை தொடர்ந்து அண்மையில் வெளியான புத்தம் புதிய பைக் மாடல்கள் வரையில் சுமார் நூறுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அந்த வீடியோவில் பேசியுள்ள வெங்கடேஷ் பிரசாத், பைத்தியக்காரத்தனமான காதல் கொண்ட ஒரு நபரால் மட்டும் தான் இப்படி ஒரு கலெக்‌ஷனை வைத்திருக்க முடியும் என மீண்டும் மீண்டும் தோனியை ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார். இது என்ன பைக் ஷோரும் போலவே இருக்கிறது எனவும் வியந்து பேசியுள்ளார்.


தோனி சொன்ன காரணம்?


மஹி.. மஹி  ஏன்? எதுக்கு? இப்படி என தோனியிடம், அந்த வீடியோவை எடுத்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த தோனி “என் வீட்டில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இது ஒன்று தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் காரணமாக தான் வாகனங்களை தொடர்ந்து, இந்த கட்டடத்திற்கு பின்புறம் பேட்மிண்டன் களத்தையும் வைத்துள்ளேன்” என விளக்கமளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.