ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை வழிநடத்த எம்.எஸ். தோனி களம் இறங்கமாட்டார் என்ற செய்தி ஒருநாள் வரும். அந்த நாள் இன்றாக இருக்குமா? அப்படிப்பட்ட ஒருநாள் இன்றாக இருந்தால் வர வேண்டாம் என்று ஒவ்வொரு தோனி ரசிகர்களும் தங்களது இஷ்ட தெய்வங்களை தட்டி எழுப்பி கும்பிட்டு வருகின்றனர். 


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பை நாயகனுமான எம்.எஸ்.தோனி இன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் தோன்றி ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷயத்தினை சொல்ல விருப்பதாக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ஒரு சில ரசிகர்கள் என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்திலும், வேறு சிலர் எங்கே தோனி ஐபிஎல் தொடரில் தனது ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்ற பயத்திலும் இருந்து வருகின்றனர். 


சர்வதேச போட்டிகளில் ஓய்வு: 


2004 ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான எம்.எஸ். தோனி, கடைசியாக நடந்த 2019 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் தனது சர்வதேச பயணத்தை முடித்துக்கொண்டார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தேர்வானபோதும் தனது விருப்பத்தின்பேரில் தொடரில் இருந்து விலகினார். 


அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளை, 2020 ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். அட என்னப்பா இது, 3 ஐசிசி வென்று கொடுத்த கேப்டனுக்கு ஒரு பேர்வெல் கூட இல்லையே என்று ரசிகர்கள் ஏங்கினர். இது இல்லை என்றால் என்ன ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறும்போது அவருக்கு மிகப்பெரிய கெளரவம் கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். 


ரசிகர்கள் மனதை நன்றாக அறிந்துகொண்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. அதனால்தான் தோனி இன்றுவரை ஓய்வுபெற முடியவில்லை என்றும் கூறப்பட்டது. 


மேலும், தோனி போகும்போதும் சிறந்த தலைமையை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு செல்வார் என்ற நம்பிக்கையில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில போட்டிகளுக்கு பிறகு மீண்டும் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதனால்தான் ஜடேஜாவுக்கு சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கருத்து பரவி வருகிறது. 


ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி..?


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் தொடர் எப்போதும் போல் சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானம் முறையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியது. இது தொடர்பான அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி இம்முறை ஐபிஎல் தொடர் அணிகளின் சொந்த ஊர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 


அதன் அடிப்படையில், சென்னையில் மட்டும் சிஎஸ்கே போட்டி நடைபெற்றால் இந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்து தோனி ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது. அப்படி இல்லையெனில் சிஎஸ்கே அணி தாங்கள் சென்னையில் விளையாடும் முதல் போட்டியுடன் எம்.எஸ். தோனி ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது. 


அந்த அறிவிப்பு குறித்தே இன்று நேரலையில் தோனி பேசவுள்ளதாக பெரும்பாலான மீடியாக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் உண்மையெனில் இந்த ஆண்டுதான் தோனி களத்தில் நடக்கும் மரண மாஸ் நடை, இன்றுடன் தடைப்படும்.