ஐபிஎல் சீசன் 18:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசன் 18ல் தோனி விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, ஆடும் லெவனில் தான் இறங்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டார். கால் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அணியில் தனது வரிசையை தோனி மாற்றிக் கொண்டதாக கூறப்பட்டாலும், பல்வேறு ஆட்டங்களில் அவரை காணாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இச்சூழலில் இந்த முறை அன்கேப்ட் வீரராக அவர் அணியில் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சில விதிகளில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாக தோனி நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார்.
வைரல் வீடியோ:
இந்நிலையில், தோனி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி தன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடுகிறார். பேட்மிண்டனை சிறப்பாக விளையாடிய தோனியை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் களம் இறங்க கூடது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் ஒலிம்பிக்கிற்கு தோனி சென்றால் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.