வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி சவுத் ஷகீல் மற்றும் ரிஸ்வானின் அபார சதத்தால் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


பாகிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்:


இதையடுத்து, முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை சுருட்டிவிடலாம் என்று எண்ணிய பாகிஸ்தான் வீரர்களுக்கு வங்கதேச வீரர்கள் குடைச்சல் அளித்தனர், தொடக்க வீரர் சதாம் இஸ்லாம் 93 ரன்கள் எடுக்க, மூத்த வீரர் முஷ்பிகிர் ரஹீம் 191 ரனகள் குவிக்க, லிட்டன் தாஸ் 57 ரன்களும் மெஹிதி ஹாசன் 77 ரன்களும் எடுத்தனர். இதனால், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 565 ரன்களை குவித்தது.


117 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு வங்கதேச வீரர்கள் செக் வைத்தனர். மெகிதி ஹாசனும், ஷகிப் அல் ஹசனும் சுழலில் மாறி, மாறி மிரட்ட விக்கெட்டுகள் மளமளவென விழத்தொடங்கியது. சையம் அயூப், கேப்டன் மசூத், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சொற்ப ரன்களில் அவுட்டாக விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 51 ரன்கள் எடுத்து 9வது விக்கெட்டாக வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டாக, வங்கதேச அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


புது வரலாறு:


இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 10 விக்கெட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை டெஸ்ட் வரலாற்றிலே பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியதே இல்லை என்ற சோகத்திற்கு நேற்று வங்கதேச வீரர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். அதுவும் பாகிஸ்தானின் சொந்த மண்ணிலே அவர்களை வீழ்த்தி ஷான்டோவின் படை சாதித்துள்ளனர். வெற்றி பெற்ற வங்கதேச வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


வங்கதேச கேப்டன் 26 வயதான நஜ்மல் ஷான்டோ இந்த வெற்றி குறித்து பேசும்போது, வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் என்று உணர்ச்சிப் பொங்க பேசினார். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் – வங்தேசம் மோதிய 13 டெஸ்ட் போட்டிகளில் 12 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றிருந்தது. ஒரு போட்டி டிரா ஆகியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணி புது வரலாறு படைத்துள்ளது.