உலக கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத தனி சகாப்தம் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் நிகழ்த்திய சாதனைகள் பலவும் இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டிற்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ள இவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், 26 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் முறியடிக்கப்படாத சச்சினின் சாதனை ஒன்றை இன்று காணலாம்.
ஒரே ஆண்டில் அதிக ரன்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்சவம் வைத்துள்ளார். சச்சின் 1998ம் ஆண்டு மொத்தம் 34 போட்டிகளில் ஆடி 1894 ரன்கள் எடுத்துள்ளார். அதில் மொத்தம் 9 சதங்களும், 7 அரைசதங்களும் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓராண்டில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் இதுவே ஆகும்.
26 ஆண்டுகளை கடந்தும் முறியடிக்கப்படாத சாதனை:
26 ஆண்டுகளை கடந்தும் இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. சச்சினுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளார். அவர் 1999ம் ஆண்டு 41 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 10 அரைசதங்களுடன் 1767 ரன்களை எடுத்துள்ளார். அதே ஆண்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 1999ம் ஆண்டு 43 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 8 அரைசதங்களுடன் 1761 ரன்கள் எடுத்துள்ளார்.
4வது இடத்திலும் சச்சின் டெண்டுல்கரே உள்ளார். அவர் 1996ம் ஆண்டு 6 சதங்கள், 9 அரைசதங்களுடன் 1611 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் சுப்மன்கில்லும், 6வது இடத்தில் கங்குலியும், 7வது இடத்தில் ரோகித் சர்மாவும், 8வது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
வீழ்த்தவே முடியாத சாதனை:
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் ஓராண்டிலே அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் இந்திய வீரர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் 10 வீரர்களில் 3 பேர் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய கிரிக்கெட் உலகில் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வடிவ போட்டிகளும் ஆடுவதால் அவர்களால் அதிகளவு ஒருநாள் போட்டிகளில் கவனம் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே என்று கருதப்படுகிறது.