Lowest Score T20: டி20 கிரிக்கெட் என்பது இன்றளவு வித்தியாசமான ஒரு போட்டி முறையாகும். ஐபிஎல் 2024ல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன் எண்ணிக்கை இந்த சீசனில் அடிக்கப்பட்டது. இந்தநிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெறும் 12 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆல்-அவுட் ஆனது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அந்த அணி வேறு எதுவும் இல்லை மங்கோலியா அணிதான். 

மங்கோலிய கிரிக்கெட் அணி 7 மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது. மங்கோலிய அணி முதல் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடியது. ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மங்கோலியா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தது டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோராகும். இதன் மூலம் 205 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பான் வெற்றி பெற்றது. இதற்கு முன் ஒரு அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோராக இன்றுவரை உள்ளது. 

12 ரன்களுக்குள் ஆல் - அவுட் ஆன மங்கோலியா: 

மங்கோலிய அணி தற்போது ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. பெரிய இலக்கை துரத்திய மங்கோலியா அணி, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. அடுத்தடுத்து ஒவ்வொரு வீரராக அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்ப, 11 வீரர்களில் 7 பேர் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் அவுட்டாகினர். ஜப்பான் தரப்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கசுமா கட்டோ-ஸ்டாஃபோர்ட் 3.2 ஓவர்களில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடந்த 2023 பிப்ரவரி 26ம் தேதி ஸ்பெயினுக்கு எதிரான ஐல் ஆஃப் மேன் 10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து சர்வதேச டி20 போட்டியில் மங்கோலியா அணி வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ரன்களில் அவுட்டான இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை படைத்தது. 

மங்கோலியாவுக்கு கிரிக்கெட் பயணம் ஒரு போராட்டம்:

மங்கோலியா கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையிலான பயணம் சிறப்பானதாக அமையவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் மங்கோலியா தனது முதல் போட்டியை செப்டம்பர் 27, 2023 அன்று விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 20 ஓவரில் 314 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய மங்கோலிய அணி 41 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலும் மாலத்தீவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது மங்கோலியா அணி. 

டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்குள் சுருண்ட அணிகளின் விவரம்:

அணி குறைந்தபட்ச ஸ்கோர் எதிரணி இடம்  தேதி
ஐல் ஆஃப் மேன் 10 ஸ்பெயின்  கார்டஜினா  பிப்ரவரி 26, 2023 
மங்கோலியா  12 ஜப்பான்  சனோ  மே 8, 2024
 சிட்னி தண்டர் 15 அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் சிட்னி டிசம்பர் 16, 2022
துருக்கி  21 செக் குடியரசு இல்ஃபோவ் ஆகஸ்ட் 30, 2019
லெசோதோ 26 உகாண்டா கிகாலி அக்டோபர் 19, 2021 
 துருக்கி  28 லக்சம்பர்க் இல்ஃபோவ் ஆகஸ்ட் 29, 2019 
 தாய்லாந்து 30 மலேசியா பாங்கி  ஜூலை 4, 2022
மாலி 30 கென்யா கிகாலி நவம்பர் 20, 2022 
 துருக்கி 32 ஆஸ்திரியா இல்ஃபோவ் ஆகஸ்ட் 31, 2019