ஐ.பி.எல் 2024:


.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அந்தவகையில் இதுவரை 11 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் பெற்று 12 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மீதம் இருக்கும் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் பெற்று பெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம். 2 போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.


முன்னதாக கடந்த மே 5 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டவர் சென்னை அணியின் பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர். அதாவது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தினார்.  இதனால் இனி வரும் போட்டிகளிலும் மிட்செல் சான்ட்னரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகள் வைத்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் உள்ள இவர் 2019 ஆம் ஆண்டு தான் முதல் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 16 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


பெஞ்சில் இருப்பது சோகமாக உள்ளது:






இந்நிலையில் சென்னை அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசியுள்ளார் மிட்செல் சான்ட்னர். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்து நேரங்களிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருப்பது சோகமாக இருக்கிறது. சில நேரங்களில் பெஞ்சில் இருப்பதே எரிச்சலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து விளையாடாமல் இருக்கும் போது கவனத்தை குவிப்பதே கடினமாக இருக்கும். அதனால் அந்த நேரத்தில் மற்ற இளம் வீரர்களுக்கு உதவி செய்வேன். பயிற்சியாக இருந்தாலும், போட்டியாக இருந்தாலும் சக வீரர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவேன்" என்று கூறியுள்ளார். இந்த சீசன் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாட உள்ளார் மிட்செல் சான்ட்னர்.