இந்தியாவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேனான மொஹிந்தர் அமர்நாத் இன்று தனது 73வது வயதை கொண்டாடுகிறார். ‘ஜிம்மி’ என்று அழைக்கப்படும் அமர்நாத், கடந்த 1983ம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றபோது இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தவர். 


உலகக்கோப்பை நாயகன்:


1983ம் ஆண்டு இந்திய அணி விளையாடிய அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 1984ம் ஆண்டு விஸ்டன் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றார். 


டிசம்பர் 1969 இல் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான மொஹிந்தர், சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் கேப்டனாக இருந்த லாலா அமர்நாத்தின் மகன் ஆவார். 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மொஹிந்தர் அமர்நாத், நடு மைதானத்தில் பலமுறை எதிரணி பந்துவீச்சாளர்களின் அசூர வேக பந்துகளை எதிர்கொண்டு அடி வாங்கி மைதானத்திலேயே விழுந்தார். 


யார் பந்தில் அடிவாங்கினார்..?


மொஹிந்தர் அமர்நாத்தின் தலையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ தனது பந்துவீச்சில் உடைத்தார். அதை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் அவரது தாடையை (பற்கள்) உடைத்தார். இது தவிர, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கானின் பவுன்சர் அடித்ததில், பந்து தலையில் பட்டதால், மொஹிந்தர் அமர்நாத் மைதானத்திற்கு நடுவே மயக்கமடைந்தார். இதுமட்டுமின்றி, மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங்கின் பந்தும் அவரை தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


துணிச்சலான வீரர்: 


உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சென்றது. அந்த அணியில், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் ஆண்டி ராபர்ட்ஸ் மூவரும் இந்தியாவின் பேட்டிங் வரிசையை பயமுறுத்தினார்கள். அவர்களை தைரியமாக எதிர்கொண்ட ஒரே வீரர் மொஹிந்தர் அமர்நாத் மட்டுமே. இருப்பினும், அந்த தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், பவுன்சர்களை விளையாடுவதில் பலவீனமாக கருதப்பட்ட மொஹிந்தர் அமர்நாத் தனது தாடையில் அடிவாங்கினார். 






என்ன நடந்தது என்றால், மைக்கேல் ஹோல்டிங் ஒரு பந்தை முழு வேகமாக வீசம் அது நேரடியாக மொஹிந்தர் அமர்நாத்தின் கன்னத்தைத் தாக்கியது. சில நொடிகளில் அவர்கள் தரையில் விழுந்தனர். அனைத்து வீரர்களும் மொஹிந்தரை அடைந்து என்ன ஆச்சு என்று பயந்தனர். ஆனால், மொஹிந்தர் எழுந்து நிற்கவில்லை. இதையடுத்து மொஹிந்தர் அமர்நாத் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருடைய வெள்ளைச் சட்டை முழுவதும் இரத்தக்கரையாகி மருத்துவமனையில் அவருக்கு முகத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டன.


ஆறு தையல்கள் போட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமிற்கு திரும்பினார். அந்த நேரத்தில் போட்டி இன்னும் நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பல்விந்தர் சிங் சந்து அவுட் ஆனார். அப்போது மொஹிந்தர் அமர்நாத் விரைவாக தன் பேடுகளை கால்களை கட்டிக்கொண்டு களத்திற்குச் சென்றார். காயத்தின் போது அவர் 18 ரன்களில் பேட்டிங் செய்தார். அவர் மீண்டும் பேட்டிங் செய்ய திரும்ப வந்து, 80 ரன்கள் எடுத்தார், இது ஒரு உதாரணம் ஆகும்.


கபில்தேவ் - மொஹிந்தர் அமர்நாத்:


1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி பஞ்சாபின் பாட்டியாலாவில் பிறந்த மொஹிந்தர் அமர்நாத் கிரிக்கெட் குடும்பத்தைச் சேர்ந்தவர். மொஹிந்தரின் தந்தை லாலா அமர்நாத் ஒரு சிறந்த இந்திய பேட்ஸ்மேன். இதுமட்டுமின்றி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் மொஹிந்தரின் தந்தை படைத்துள்ளார். 1983ல் கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றாலும், இறுதிப்போட்டியில் இந்தியாவை வெற்றிபெறச் செய்த பெருமை மொஹிந்தர் அமர்நாத்தையே சாரும். இறுதிப் போட்டியில் ஆல்ரவுண்ட் செய்து இந்தியாவின் நிறைவேறாத கனவை மொஹிந்தர் நிறைவேற்றினார். இப்போட்டியில் அமர்நாத் 26 ரன்கள், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ ஆனார்.


இன்றைய இளம் தலைமுறையினர் 1983 உலகக் கோப்பையை நினைவில் வைத்திருப்பதில்லை, ஆனால் 1983 உலகக் கோப்பை கோப்பையை வென்ற இந்தியா கேப்டன் கபில்தேவ் கையில் வைத்திருக்கும் படம் நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது. இந்தப் படத்தில், லார்ட்ஸ் பால்கனியில் ஷாம்பெயின் பாட்டிலை வைத்துக்கொண்டு கபில்தேவ் உடன் நிற்பவர்தான் அந்த உலகக் கோப்பை மற்றும் இந்திய அணியின் ஹீரோ.






20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய மொஹிந்தர் அமர்நாத் மொத்தம் 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 42.50 சராசரியில் 4378 ரன்கள் எடுத்தார், அதில் 11 சதங்கள் மற்றும் 24 அரை சதங்களும் அடங்கும். ODI பற்றி பேசுகையில், இந்த வீரர் 85 போட்டிகளில் விளையாடி 30.53 சராசரியில் 1924 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்.