India vs Australia, 2nd ODI: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தூரில் தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச முடிவு செய்தார். 


இந்திய அணியின் இன்னிங்ஸை ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். இதில் ருத்ராஜின் விக்கெட்டினை போட்டியின் 4வது ஓவரில் ஹசில்வுட் கைப்பற்ற, அதன் பின்னர் கில்லுடன் ஸ்ரேயஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல் பொறுப்புடனும் விளையாடினர். 


இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை கடந்து ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்து வந்தனர். குறிப்பாக ஓவருக்கு குறைந்த பட்சம் ஒரு பவுண்டரியாவது அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் சிறப்பாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டினைக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனது அணியில் இருந்த டாப் பவுலர் தொடங்கி பகுதி நேர பந்து வீச்சாளர் வரை அனைவரையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டார். ஆனால் இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. 


சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் 86 பந்தில் சதம் விளாசினார். அவர் 86 பந்தில் 10 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி இருந்தார். அதன் பின்னர் அபேட் வீசிய ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயஸ் அடித்தது அபேட்டே கேட்ச் செய்தார். இதனால் அவர் அவுட் என அனைவரும் நினைத்தனர். ஆனால் மூன்றாவது நடுவர் அவருக்கு நாட் - அவுட் கொடுக்க, மீண்டும் களத்துக்கு வந்தார் ஸ்ரேயஸ். ஆனால் அடுத்த பந்தினை பவுண்டரிக்கு விளாசிய ஸ்ரேயஸ் அதே ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 164 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். 


400 ரன்கள்:


 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலககுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார். 


அதன் பின்னர் நிதானமாக ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தது. குறிப்பாக வார்னர் விக்கெட் விழுந்ததைப் பற்றி கவலைப்படாமல் ஆடிக்கொண்டு இருந்தார். ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. 


இதனால் போட்டி தடைபட்டதால் போட்டி ஓவரும் வெற்றி இலக்கும் குறைக்கப்பட்டது. அதாவது 33 ஓவர்களில் 317 ரன்கள் சேர்த்தால் வெற்றி என மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி 13வது ஓவருக்கு முன்னதாக வார்னர் தனது கை உறைகளை மாற்றிக்கொண்டார். இதனால் இடதுபுறம் பேட்டிங் பிடிக்கும் வார்னர் வலதுகையில் பேட்டிங் பிடித்தார். இந்த ஓவரை வீசிய அஸ்வினுக்கு சிரிப்பாக இருந்தாலும், அவரும் சவால் அளிக்கும் வகையில் பந்து வீசினார். அந்த ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு சிங்கிள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். 


அதன் பின்னர் அதேபோல் அஸ்வின் வீசிய 15வது ஓவரிலும் வலதுகையில் பேட்டிங் பிடித்த வார்னர், அஸ்வின் பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தில் வார்னரை எல்.பி.டபள்யூ முறையில் அவுட் செய்தார்.