Mohammed Siraj: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2023 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது.


முகமது சிராஜ் முதலிடம்:


இதன் பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலையும் அதைத் தொடர்ந்து ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டது. இந்நிலையில் ஐசிசி இன்று ஒருநாள் கிரிக்கெட்டின் பந்து வீச்சு மற்றும் ஆல் - ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலை இன்று அதாவது செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிட்டுள்ளது.


அதில் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாப் ஆர்டர் தொடங்கி மிடில் மற்றும் டெயிலெண்டர்ஸ் என மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இவரின் அட்டகாசமான பந்து வீச்சினால் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை வராலாற்றில் மிகவும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது மட்டும் இல்லாமல் இந்திய அணி தனது 8வது ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.


இந்திய அணி 2வது இடம்:


இந்த வெற்றிக்குப் பின்னர் வெளியான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 114.659 ரேட்டிங்கை பெற்று 2வது இடத்தில் உள்ளது. அதேசமயம் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி 114.889 ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆசியக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி செப்டம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை அடைய முடியும். அதே சமயம் இந்த தொடரின் மூலம் இந்திய அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அணியும் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. 




இந்நிலையில் இன்று வெளியான பந்து வீச்சாளர்கள் பட்டியலில், இந்திய அணியின் முகமது சிராஜ் 694 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியின் ஹசல் வுட் 678 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 677 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். 


நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முபீஜ் உர் ரகுமான் மற்றும் ரஷித் கான் உள்ளனர். இதையடுத்து ஆறாவது இடத்தில் 652 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியின் மிட்ஷெல் ஸ்டார்க் உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7வது இடத்தில் நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 645 புள்ளிகளுடன் உள்ளார். இவர் சமீபத்தில்தான் காயத்தில் இருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இதையடுத்து 8வது மற்றும் 9வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா மற்றும் இந்தியாவின் குல்தீப் யாதவ் உள்ளனர். 10வது இடத்தில் பாகிஸ்தான் அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளரான ஷெகின் அஃப்ரிடி 632 புள்ளிகளுடன் உள்ளார். 


ஆசிய கோப்பைத் தொடரில் பந்து வீச்சாளார்கள் சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அகிய அணிகளைச் சேர்ந்த பந்து வீச்சாளர்களே டாப் 10இல் 5பேர் உள்ளனர்.  சிராஜ் முதல் இடத்தினை பிடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மற்றும்  இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.