இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் வீரர் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது முகமது ஷமி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளார்.  அவருக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனினும் அவர் கார்டியோ பரிசோதனையில் தகுதி பெற வேண்டும். அதன்பின்னர் அவர் பயிற்சியை தொடங்கும் சூழல் இருந்தது.


இந்நிலையில் இன்று முகமது ஷமி தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் வேகமாக ஓடி வந்து பந்துவீசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் சரியாக ஸ்டெம்பை குறிவைத்து பந்துவீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மீண்டும் பயிற்சியை தொடங்கிய ஷமிக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரை விரைவில் டி20 உலகக் கோப்பை தொடரில் காண வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் பதவிட்டு வருகின்றனர்.









டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் மற்றொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி பந்துவீச தொடங்கியுள்ளது. பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்குள்  முகமது ஷமி உடல்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும் அவர் தற்போது நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவில்லை. இதன்காரணமாக அவரை வரும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பிறகு டி20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா செல்வார் என்று கருதப்படுகிறது.  எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.




மேலும் படிக்க: தெ. ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டன்..! மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன்..!