இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசத்தலாக பந்துவீசியது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அரைசதம் கடந்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.


இந்நிலையில் இன்று அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். அத்துடன் முதல் முறையாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி டி20 தொடரை வென்றுவிடும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரமாக முயற்சி செய்யும். 


 






இன்றைய போட்டிக்கு பும்ரா இல்லாத காரணத்தால் மீண்டும் தீபக் சாஹர் இடம்பெறுவார். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகம் உள்ளதால் அஷ்வின் இந்தப் போட்டியிலும் களமிறங்குவார். இவர்கள் தவிர ரிஷப் பண்ட் அணியில் தொடருவார் என்று கருதப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை ராகுல்,ரோகித், விராட் மற்றும் சூர்யகுமார் அணிக்கு முக்கியமானவர்களாக உள்ளனர். இவர்கள் நான்கு பேரில் இருவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டும். 


இருப்பினும் இந்திய அணிக்கு டாஸ் முக்கியமான விஷயமாக அமையும். ஏனென்றால் சமீப காலங்களில் இந்திய அணி இரண்டாவது பந்துவீச்சில் சொதப்பி வருகிறது. ஆகவே இன்றைய போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்தால் அடிக்கும் ஸ்கோரை பந்துவீச்சில் டிஃபெண்ட் செய்யுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


இந்தியாவில் தொடரை இழக்காத தென்னாப்பிரிக்கா: 


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது வரை 3 டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. அந்தத் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 


இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-தென்னாப்பிரிக்கா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா 2-2 என வெற்றி பெற்று இருந்தன. அப்போது 5வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக அந்தத் தொடரும் 2-2 என சமனில் முடிந்தது. இதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் நடைபெற்றுள்ள டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி இழந்ததே இல்லை. அத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு முறை கூட கைப்பற்றாத சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த முறையாவது அந்த கனவை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.