வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடலை தகவமைக்கும் வகையில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அதன் பின் எந்த விதமான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. அதாவது ஷமி கடைசியாக விளையாடியது ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி தான். இதனால் ஷமி எப்போது மீண்டும் களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தான் முகமது ஷமி கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடலை தகவமைக்கும் வகையில் பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள முகமது ஷமி, "நீங்கள் தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்தால் எதுவும் உங்கள் அப்பாற்பட்டது அல்ல" என்று கூறியுள்ளார்.
இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபியில் முகமது ஷமி களம் இறங்குவார் என்று ஜெய்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிர பயிற்சியில் முகமது ஷமி:
இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் முகமது ஷமி எப்போது இந்திய அணியில் களம் இறங்குவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஷமி பற்றிய உங்கள் கேள்வி சரிதான், ஆனால் மயங்க் யாதவ் அணியில் இருப்பாரா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர், அவரை நாங்கள் கவனித்து வருகிறோம்.
தற்போது NCA யில் இருக்கிறார், ஏனெனில் அவர் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார், மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேவைப்படுகிறார்"என்று கூறியுள்ளார்.
அதாவது நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷமி களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.