உலகக் கோப்பை தொடர்:


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 


தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல், இந்திய அணி வீரர்களும் மிகுந்த சோகத்துடன் இருந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி உற்சாகப்படுத்திய வீடியோக்கள் எல்லாம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. 


வலியுடன் விளையாடிய முகமது ஷமி:


அதேபோல், வீரர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உலகக் கோப்பை தொடரின் போது வலியுடன் விளையாடிய தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, இந்த உலகக் கோப்பை தொடரில் முகமது ஷமிக்கு ஆரம்பத்தில் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இச்சூழலில், வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடரில் அவர் விலகியதை தொடர்ந்து முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது.


அதிக விக்கெட்டுகள்:


அதன்படி, உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெற்றார். அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார் முகமது ஷமி. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனைவரின் கவனத்தையும் பெற்றார்.


அதேபோல், உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 7 போட்டிகள் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த முறை உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றார் .


இந்தநிலையில் தான் அவர் உலகக் கோப்பை தொடர் முழுவதும் குதிகாலில் ஏற்பட்டிருந்த காயத்துடன் விளையாடிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் முகமது ஷமி வலில் நிவாரணி ஊசியை செலுத்திக் கொண்டு காயத்துடன் தான் பந்து வீசியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஓய்வில் இருக்கும் முகமது ஷமி விரைவில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Shubman Gill: 35 டெஸ்ட் இன்னிங்ஸ்... அஸ்வினை விட கம்மியான ரன்கள் எடுத்த சுப்மன் கில்... என்னதான் ஆச்சு! விவரம் உள்ளே!


 


மேலும் படிக்க: Watch Video: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... விராட் கோலியை பாராட்டிய ரோகித் சர்மா... இதுதான் காரணமா? வைரல் வீடியோ!