இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று(செப்டம்பர் 3) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இச்சூழலில் முகமது ஷமியின் சிறந்த 5 பந்துவீச்சு தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


2023 உலகக் கோப்பை அரையிறுதி:


கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லாதம் மற்றும் டேரில் மிட்செல் உட்பட மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது ஷமியின் வெறித்தனமான பந்து வீச்சால் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட், 2018 - 6 விக்கெட்டுகள்:


கடந்த 2018 ஆம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் தன்னுடைய அபாரமான பந்து வீச்சின் மூலம் ஆரோன் ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் மற்றும் டிம் பெயின் போன்ற முக்கிய வீரர்கள் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி. ஆனால் இந்த போட்டியில் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா vs இலங்கை 2023 உலகக் கோப்பை - 5 விக்கெட்டுகள்:


2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவரும் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். மும்பையில் உள்ள வானகடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை மிரட்டினார். இந்த போட்டியில் 20 ஓவர்கள் வரை கூட தாக்கு பிடிக்க முடியாத இலங்கை அணி வெறும் 54 ரன்களில் சுருண்டது.


குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் IPL 2023 – 4 விக்கெட்டுகள்


கடந்த ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் முகமது ஷமி அசத்தினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி பெற்றார். 


கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிடல்ஸ், ஐபிஎல் 2020 - 3 விக்கெட்டுகள்:


ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முகமது ஷமி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடினார். அந்த போட்டியில் பிருத்வி ஷா, ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.