பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் தலையில் பந்துபட்டு காயத்தால், நாளைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மோக்கா மோக்கா என்று குஷி ஆகி விடுவார்கள் உலக கிரிக்கெட் ரசிகர்கள். அது மட்டுமின்றி இந்திய அணி கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் விளையாடுவது அரிதான ஒன்றாக இருப்பதால், இந்த அணிகளின் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
அதற்கேற்றார் போல எல்லா உலகக்கோப்பை, ஆசிய கோப்பை தொடர்களிலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முதல் போட்டி வருவது போல அட்டவணை அமைக்கப்படும். இரு அணிகள் விளையாடும் போட்டிகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை என்றும் குறைந்ததும் இல்லை. அந்த போட்டியின் போது டி.ஆர்.பி. ரேட்டிங்கும் எகிறும். ஹாட்ஸ்டாரில் லைவ் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் உயரும். இப்படி காலம் காலமாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை பெரும் பரபரப்பாக மாற்றி வைத்துள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
காயங்களால் பாதிக்கப்படாத பாகிஸ்தான் அணி
இந்த நடப்பு உலகக்கோப்பையின் மிகப்பெரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இரு அணிகளுமே சிறந்த அணியை மைதானத்திற்குள் களமிறக்க நினைக்கும். பாகிஸ்தான் அணியில் உலகக்கோப்பைக்கு முன்பாக பல வீரர்கள் காயத்தில் இருந்தனர். அவர்களில் ஒவ்வ்வொருவராக தற்போது மீண்டு வர, கடைசி வரை பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியலில் மாற்றம் செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு ஓரிரு வாரம் முன்பு அவர்களின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி காயத்தில் இருந்து மீண்டு, விளையாடும் அளவுக்கு உடல் தகுதியுடன் அணிக்கு திரும்பியது பாகிஸ்தானை அசுர பலமாக்கியது. அவரோடு ஃபக்கர் ஜமானும் அணிக்கு திரும்பினார்.
தலையில் தாக்கிய பந்து
இந்த நிலையில் காயங்களால் பாதிக்கப்படாத ஒரே பலமான அணியாக இருந்து வந்த பாகிஸ்தான் மீது கண் பட்டு, ஷான் மசூதின் மேல் பந்து பட்டு காயமடைந்துள்ளார். நாளை பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கவிருப்பதால், நேற்று வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளனர். பயிற்சி செய்யும்போது வேகமாக அடிக்கப்பட்ட பந்து தாக்கி காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எப்படி அடிபட்டது?
வெள்ளிக்கிழமை காலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் தயாராகிக்கொண்டிருந்தபோது, ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் நெட் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்தார். அப்போது வலுவாக ஒரு ஷாட் அடித்தார். அது வேகமாக சென்று ஷான் மசூத்தின் தலையில் அடித்த நிலையில், அவர் உடனடியாக தரையில் விழுந்தார்.
சுற்றி இருந்த அணி வீர்ரகள் அவரை எழுப்பி உடனடியாக பிசியோவை அழைத்து முதலுதவி செய்தனர். சிறிது நேரத்தில், அடிபட்ட தலையின் பகுதியை கையால் மூடிக்கொண்டு எழுந்த அவர் பயிற்சி மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்கேன் எடுக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். 33 வயதான அவர் இதுவரை பாகிஸ்தானுக்காக 12 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார், 125.00 ஸ்ட்ரைக் ரேட்டில் 220 ரன்கள், இரண்டு அரைசதங்கள் குவித்துள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா விளையாடும் போட்டி இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த காயம் பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக உள்ளது. இன்று முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் போட்டியின் சூப்பர் 12 கட்டத்தின், குரூப் 2 இன் இரண்டாவது போட்டியாக இது நடைபெறுகிறது.