வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு 270 நாள்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாடகைத் தாய் முறையில் மாற்று கருவறை மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாள்கள் மட்டுமே விடுமுறை என தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பானது 12 மாதங்களாக அதாவது ஓராண்டாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன் 3 மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பு 2016-ஆம் ஆண்டு 9 மாதங்களாக அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உயர்த்தி அறிவிக்கப்பட்ட இந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு 270 நாள்களாக விடுமுறை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு, தாய்ப்பால் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களின் பணிச்சுமை நேரடியாகக் குழந்தை பெறுபவர்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.