ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வந்தது. முதல் சுற்று முடிவில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன.
இந்த முதல் சுற்று ஆட்டங்களில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ராஸா உள்ளார். அவர் 3 இன்னிங்ஸில் மொத்தம் 136 ரன்களை குவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ தவுத் 129 ரன்களும், ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சே 121 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா மற்றும் நெதர்லாந்தின் பாஸ் டி லீடே ஆகியோர் முதல் சுற்றில் தலா 7 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
குரூப் பி பிரிவில் இடம்பெற்ற ஜிம்பாப்வே அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது அயர்லாந்து.
இதையடுத்து, முதலில் விளையாடிய ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ராஸா 82 ரன்கள் (48 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்) எடுத்தார். அந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. சிகந்தர் ராஸா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் சிகந்தர் ராஸா 14 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்ல சிகந்தர் ராஸா 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார். எனினும் அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கண்டது. மூன்றாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் சிகந்தர் ராஸா 40 ரன்கள் (23 பந்துகளில் 3 பவுணஅடரிகள் 2 சிக்ஸர்கள்) விளாசினார். அத்துடன், 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
அந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்திலும் சிகந்தர் ராஸா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிகந்தர் ராஸா பாகிஸ்தானின் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார். அதன் பிறகு அவரது பெற்றோர் ஜிம்பாப்வேவுக்கு குடிபெயர்ந்தனர்.
அதிக ஸ்கோர் பதிவு செய்த 2வது வீரர்
நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓதெளத் 3 இன்னிங்சில் 129 ரன்கள் எடுத்துள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி-ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் மேக்ஸ் 23 ரன்கள் எடுத்தார். அதுவே அந்த அணி வெற்றி பெற காரணமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் நமீபியா அணியை நெதர்லாந்து எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்திலும் நெதர்லாந்து வென்றது. இலங்கை அணியுடனான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் மேக்ஸ் 71 ரன்கள் எடுத்தார்.
ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சே
முதல் சுற்றில் அதிக ஸ்கோர்களை பதிவு செய்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் அடுத்த இடம் வகிப்பவர் ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சே ஆவார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஜார்ஜ் முன்சே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் கத்துக்குட்டி அணிகளில் ஒன்றான ஸ்காட்லாந்து வெற்றி பெற அவரது பங்களிப்பு முக்கியப் பங்கு வகித்தது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்சே பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்திலும் அந்த அணி தோல்வி அடைந்தது. அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்சே 54 ரன்கள் எடுத்தார். எனினும், அந்த ஆட்டத்திலும் ஸ்காட்லாந்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று வீரர்களுமே அதிக கவனம் ஈர்த்தனர்.