இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் மொயின் அலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முக்கியமான வீரராக திகழும் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஓய்வு பெற்றிருப்பதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் ஆவார். 


மொயின் அலி ஓய்வு:


ஓய்வு குறித்து மொயின் அலி கூறியிருப்பதாவது, “எனக்கு 37 வயதாகிறது. நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்து அணிக்காக ஏராளமான போட்டிகளில் ஆடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம். இதுதான் சரியான நேரம். நான் எனது வேலையை செய்துவிட்டேன்.


நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். நீங்கள் இங்கிலாந்திற்காக முதன்முதலில் ஆடும்போது எத்தனை போட்டிகளில் ஆடப்போகிறீர்கள் என்று தெரியாது. 300 போட்டிகளுக்கு நெருக்கமாக ஆடியுள்ளேன். தொடக்கத்தில் சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டிலே சென்றது. மோர்கன் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு எடுத்துச் சென்றதும் வேடிக்கையாக இருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டிகளே சரியான கிரிக்கெட்.


ஐ.பி.எல். ஆடுவாரா?


நான் மீண்டும் இங்கிலாந்திற்காக விளையாட முயற்சிக்கலாம். ஆனால், உண்மையில் நான் விளையாட மாடடேன் என்று தெரியும். ஓய்வு பெற்ற பிறகும் என்னால் விளையாட முடியும் நான் உணர்கிறேன். ஆனால், விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அணி சுழற்சியாக உருவாக வேண்டும்.

விளையாட்டில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மக்கள் மறந்துவிடுவார்கள். நான் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என்ன கொண்டு வந்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும். நான் நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் நான் உணர்ந்த வரையில் மகிழ்ச்சியாக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


அதேசமயம், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை நான் இன்னும் விரும்புகிறேன். பயிற்சி அளிப்பதும் நான் செய்ய விரும்பும் ஒன்றாகும்.  




சிறந்த ஆல்ரவுண்டர்:


1987ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்த மொயின் அலிக்கு தற்போது 37 வயதாகிறது. இவர் இதுவரை மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 15 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 94 ரன்களும், 138 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் 6 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 355 ரன்களும், 92 டி20 போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 1229 ரன்களும் எடுத்துள்ளார்.


சிறந்த சுழற்பந்துவீச்சாளரான மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் 204 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளையும், டி20யில் 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிர்ச்சி:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான வீரராக திகழ்ந்து வரும் மொயின் அலி ஐ.பி.எல். தொடரில் 67 போட்டிகளில் ஆடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 அரைசதங்களுடன் 1162 ரன்கள் எடுத்துள்ளார். 2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மொயின் அலி கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆடி முக்கியமான வீரராக உலா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.