உலகம் முழுவதும் அதிகம் பேரால் விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் இருக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் மட்டுமே நிறைந்த இந்த கிரிக்கெட் உலகில் பெண்களுக்கென்று இடம் இருந்தாலும், மற்றவர்களைத் தாண்டி அனைவராலும் அறியப்பட வேண்டுமென்றால் அதீத சாதனைகளை செய்து தான் வெளியே தெரிய வேண்டிய சூழல் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கு நிகராக இந்திய பெண்கள் அணியையும் வழிநடத்தி, ஆண்களுக்கு நிகராக சாதனைகளையும் படைத்து, பெண்கள் கிரிக்கெட் உலகில் தனித்துவம் மிக்க வீராங்கனையாக சுமார் இரண்டு தசாப்தங்களாக திகழ்ந்தவர் இன்று தனது பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். அந்த வீராங்கனை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இன்ஸ்ப்ரேஷனாக திகழும் மிதாலி ராஜ் தான்.




மிதாலி ராஜின் வரலாறு:


1982ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த துரை ராஜ் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த லீலா ராஜுக்கும் மகளாகப் பிறந்தவர் தான் மிதாலி ராஜ். தந்தை துரை ராஜ் இந்திய விமானப் படையில் ஏர்மேனாக பணியாற்றியவர் என்பதால் செல்வ செழிப்புடனே வளர்ந்தார் மிதாலி.  தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்துவந்த மிதாலி ராஜ் படித்ததெல்லாம் கேஎஸ் உயர்நிலைப்பள்ளியிலும், செகந்திராபாத் கஸ்தூரிபாய் ஜூனியர் கல்லூரியிலும் தான். கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்த மிதாலி ராஜ் தனது பத்தாவது வயதிலேயே கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிவிட்டாராம்.


ஆரம்பகால கிரிக்கெட்:


பள்ளி நாட்களில் தனது மூத்த சகோதரருடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி செய்யத் தொடங்கியதன் பலனாக அவருக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இந்திய ரயில்வே அணிக்காக விளையாடத்தொடங்கிய மிதாலி, தனது திறமையான பேட்டிங்கால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான நேரம் கூடி வந்தது. 1997ல் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட, கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு நழுவியது. ஒருவழியாக 1999ல் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது வாய்ப்புத் தேடி வந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் மிதாலி ராஜ். தான் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே 114 ரன்களை விளாசி, களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசியதோடு, முதல் போட்டியிலேயே அதிக ரன்களை குவித்த மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 5 பெண்கள் தான் களமிறங்கிய முதல் போட்டியில் சதமடித்துள்ளனர். அதில் மிதாலி ராஜ் நான்காவது நபர்.


தொடக்க போட்டியிலேயே 3 சாதனைகள்:


அதுமட்டுமல்ல மேலும் இரண்டு சாதனைகளையும் அந்த போட்டியில் படைத்தார் மிதாலி. இந்திய பெண்கள் அணியில் பெஸ்ட் பார்ட்னர்ஷிப் மற்றும் ஒட்டுமொத்த பெண்கள் கிரிக்கெட்டிலும் மூன்றாவது சிறந்த பார்ட்னர்ஷிப்பில் மிதாலி ராஜ் இருக்கிறார். மிதாலி ராஜ் தொடக்க ஆட்டத்தில் களமிறங்கியபோது அவருடன் விளையாடிய ரேஷ்மா 104 ரன்கள் எடுக்க இந்த இணை 258 ரன்களை குவித்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இணையால் எந்த விக்கெட்டிலும் அடிக்கப்பட்ட்ட மூன்றாவது மற்றும் முதல் விக்கெட்டில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்கள் இதுவாகும். தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்த மிதாலிக்கு அப்போது 16 வயது 205 நாள்கள் தான். அத்தனை குறைவான வயதில் யாரும் சதம் அடிக்கவில்லை. இந்த சாதனை சுமார் 22 ஆண்டுகள் கழித்து தான் முறியடிக்கப்பட்டது. 2021ல் அயர்லாந்தின் அமி ஹண்ட்டர் சதமடித்தபோது அவருக்கு வயது 16.


டெஸ்ட் போட்டியில் சாதனை:


பரதநாட்டியம் ஆடுவதில் நாட்டம் கொண்ட ஒரு பெண்ணால் இவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியுமா என்று வியந்தது உலகம். அவ்வளவு தான் தனக்கான ஒரு இடத்தை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் தேடிக்கொண்டார் மிதாலி. அதன் பிறகு மிதாலிக்கு எல்லாமே ஏறுமுகம் தான். ஒருநாள் போட்டிகளில் விளையாடிவிட்ட மிதாலிக்கு 2 ஆண்டுகள் கழித்து 2002ல் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் முதன் முறையாக களமிறங்கினார் மிதாலி. களமிறங்கிய மூன்றாவது போட்டியிலேயே,  214 ரன்களை விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த கரேன் டாண்டனின் சாதனையை முறியடித்தார் மிதாலி. இந்த சாதனையை நிகழ்த்தியபோது அவருக்கு வயது 19 தான். இந்திய பெண்கள் அணியில் 200 ரன்களை விளாசிய முதல் பேட்ஸ்மேனும் அவர் தான் கடைசி பேட்ஸ்மேனும் அவர்தான்.




விரைவிலேயே இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பொறுப்பு மிதாலிக்குத் தேடி வந்தது. தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி 2005ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதி வரை அழைத்துச் சென்றார் மிதாலி. தனது கேப்டன்ஷிப்பில் இரண்டு முறை இந்திய பெண்கள் அணியை இறுதி வரை அழைத்துச் சென்றிருக்கிறார் மிதாலி. இந்திய ஆண்கள் அணியிலேயே இப்படி ஒரு சாதனையை எந்த கேப்டனும் நிகழ்த்தவில்லை.


டி20 போட்டிகளில் சாதனை:


2006ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார் மிதாலி. அந்த போட்டியின் கேப்டனும் அவர் தான். அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை விளாசியிருந்தார் மிதாலி. சுமார் 23 ஆண்டுகாலம் விளையாடியதால் மட்டுமல்ல, கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்ததாலும் இவரை லேடி டெண்டுல்கர் என்று அழைக்கின்றனர் ரசிகர்கள். 


மிதாலியின் பேட்டிங் சாதனை:


இவரது 23 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் கிரிக்கெட் அணியில் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடியது இரண்டே பேர் தான். ஒருவர் இந்திய அணியில் இன்றும் விளையாடி வரும் ஜூலான் கோஸ்வாமி மற்றும் மிதாலி ராஜ் தான். மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். போட்டியில் விளையாடியது மட்டுமல்ல பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டர்களில் அதிக அரைசதங்களை விளாசியிருப்பது மிதாலி தான். ஒரு நாள் போட்டிகளில் 71 அரை சதங்களையும், டி20 கிரிக்கெட்டில் 17 அரை சதங்களையும் என்று 88 அரை சதங்களை விளாசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 7 அரை சதங்களையும் தொடர்ச்சியாக விளாசியவர் என்ற பெருமையயும் பெற்றிருக்கிறார் மிதாலி. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை 2017ல் படைத்தார் மிதாலி. இதுவரை 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 7805 ரன்களை விளாசியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 12ல் தான் விளையாடியிருந்தாலும் 43.68 என்ற சாராசரியுடன் 1 சதம் 4 அரைசதம் உள்பட 699 ரன்கள் விளாசியிருக்கிறார். 89 டி20 போட்டிகளில் விளையாடி 17 அரைசதம் உள்பட 2364 ரன்களை விளாசியிருக்கிறார். டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல்பெண்ணும் இவர்தான், அதிக ரன்களுடன் முதலிடத்தில் இருப்பவரும் இவர்தான்.




கேப்டன்ஷிப்பில் சாதனை:


பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு வந்தபோது மிதாலிக்கு வயது 22 தான். இந்திய அணியை வழிநடத்திய இளம் கேப்டன் மிதாலி தான். உலக அளவில் 3வது இளம் கேப்டன். உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு அணியை அதிக போட்டிகளில் வழிநடத்தியவர் மிதாலி ராஜ் தான். 2022 உலகக்கோப்பைப் போட்டி வரை 28 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார் மிதாலி. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி கேப்டன் இத்தனை போட்டிகளில் வழிநடத்தியதில்லை.


2005-2006, 2006-2007, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியகோப்பைத் தொடரில் வெற்றி பெற்றிருக்கிறது மிதாலி தலைமையிலான இந்திய அணி. கிரிக்கெட் கண்டுபிடித்தவர்கள் நாட்டிலேயே சென்று அவர்களை சம்பவம் செய்ததில்லை இந்திய அணி. அந்த துயரத்தையும் துடைத்தார் மிதாலி ராஜ். 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடரை வென்று அசத்தியது. இதுவரை ளையாடிய போட்டிகளிலேயே மிதாலி அதிகம் விளையாடியது இங்கிலாந்து அணிக்கு எதிராக தான்.




லேடி சச்சின் டெண்டுல்கர்:


109 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியிருக்கிறார் மிதாலி ராஜ். உலக கிரிக்கெட் வீராங்கனைகளில் இத்தனை போட்டிகளில் தொடர்ச்சியாக யாரும் விளையாடியதில்லை. சச்சினின் சாதனைகளை சொல்லி முடிக்க எப்படி பக்கங்கள் போதாதோ, அதேபோல மிதாலியின் சாதனைகளை சொல்லி முடிக்க பக்கங்கள் போதாது.


மிதாலி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதுடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. மிதாலியின் தலைமையில் இந்திய அணி விளையாடியது ஒரு சகாப்தம் மட்டுமல்ல, இந்திய பெண்கள் அணியை கடைசி வரை உலக அரங்கில் முன்னணியில் நிறுத்திய மிதாலியும் ஒரு சகாப்தம் தான்.