முதல் டெஸ்டில் விளையாடமாட்டேன்:


இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டார்க்கிடம், இந்தியா உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டார்க், ”காயத்திலிருந்து குணமடைந்து வருகிறேன். இன்னும் சில வாரங்கள் ஆகும். பின்னர் டெல்லியில் உள்ள தோழர்களை நான் சந்திக்கலாம், அங்கு சக வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியை தொடங்குவேன். முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”, என கூறினார்.


இந்தியாவில் என்ன எதிர்பார்க்க முடியும்?


”இந்தியாவின் சூழலில் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது மற்றவர்களுக்கு தெரியாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அங்கு பந்து திரும்பும் என எங்களுக்கு ஒரு நியாயமான யோசனை உள்ளது. ஆனால், ஆட்டத்தைத் தொடங்கும் வரை அல்லது எந்த விக்கெட்டில் விளையாடுவது என்று முடிவு செய்யும் வரை அந்த சூழல் உங்களுக்குத் தெரியாது. எனவே, இது ஒரு பெரிய சவாலாக இருக்கும், இந்திய சுற்றுப்பயணத்திற்கான நல்ல நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது” எனவும் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.


விரலில் காயம்:


தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விரலில் காயமடைந்த ஸ்டார்க், அந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அதைதொடர்ந்து தற்போது, இந்திய அணிக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார் என்பதை, அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்:


பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.  அதன்படி, பிப்ரவரி 9-13 தேதியில் முதல் டெஸ்ட் போட்டியும், 
பிப்ரவரி 17-21 தேதியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து,  மார்ச் 1-5 தேதியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 9-13 தேதியில் நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.


ஆஸ்திரேலியாவிற்கு பின்னடைவு:


உலகக்கோப்பை  டெஸ்ட் தொடரின் புள்ளிப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பதால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஆஸ்திரேலியா ஏற்கனவே உறுதி செய்து விட்டது.  அதேநேரம், உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல பார்டர் - கவாஸ்கர் தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதனால் 2016/17l இந்தியாவில் நடைபெற்ற பார்டர்- கவாஸ்கர் தொடரில் மட்டுமின்றி,  2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடர்களையும் வென்று வரலாற்றுத் தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் முதல் போட்டியில் பங்கேற்காதது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான முந்தைய போட்டிகளில், ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்.


ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்