இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட்ர டி20 தொடரின் இரண்டாவது போட்டி லக்னோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் ரன் எடுக்க கடுமையாக திணறினர். 


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி20யில் நியூசிலாந்து அணியின் குறைந்த ஸ்கோராக இது பதிவானது. 


100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு பந்து மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் சென்றது. 100 ரன்கள் எடுக்க கிட்டத்தட்ட 20 வது ஓவரை நோக்கி பயணிக்கும்போது சூர்யகுமார் யாதவ் 20வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.


நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அந்த அணியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரத்தில், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மார்க் சாப்மேன் தலா 14 ரன்களும், ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே தலா 11 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


100 ரன்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாகவே சூர்யகுமார் யாதவ், ஒரு பவுண்டரியுடன் 31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரத்தில், இஷான் கிஷான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் மற்றும் சோதி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சூர்யகுமார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இரு அணிகளும் குறைந்த அளவிலான ரன் எண்ணிக்கையை பெற்றதற்கு லக்னோ பிட்சே காரணம் என்று கூறப்பட்டது. வீசப்பட்ட 39.5 ஓவர்களில் 30 ஓவர்கள் இருநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீசியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் 13 ஓவர்களையும், நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் 17 ஓவர்களையும் வீசினர். சர்வதேச டி20 போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய அதிக ஓவர்கள் இதுவாகும்.


பிட்ச் கியூரேட்டர் பதவி நீக்கம்:


இந்தநிலையில், இந்த மோசமான பிட்சை தயார் செய்த பிட்ச் கியூரேட்டர் சுரேந்தர் குமார் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக லக்னோ மைதானத்தின் புதிய பிட்ச் கியூரேட்டராக சஞ்சீவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 


போட்டிக்கு முன்பாக, பிட்ச் கியூரேட்டர் சுரேந்தர் குமார் இரண்டு கறுப்பு மண் ஆடுகளத்தை தயார் செய்திருந்ததாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் சிவப்பு மண் ஆடுகளத்தை அமைக்குமாறு போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அணி நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, போட்டியின் நாளான்று, போதுமான அளவிற்கு பிட்சை தயார் செய்ய முடியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. 


போட்டிக்கு பிறகு பேசிய இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “ போட்டியை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், வெற்றிபெற நிறைய தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த மைதானம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் மட்டுமல்ல, இரு அணி வீரர்களும் பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்டனர். 


20 ஓவர் போட்டிக்கு ஏற்ற பிட்ச் இதுவல்ல. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.” என்றார். 


ஐபிஎல் -க்கு புதிய பிட்ச் :


லக்னோ டி20 முடிந்த உடனேயே, ஏகானா ஸ்டேடியத்தின் பிட்ச் கியூரேட்டர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல் போட்டிக்காக இங்கு புதிய ஆடுகளம் தயாராகும் என்றும் கூறப்படுகிறது. இந்த மைதானம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் சொந்த மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறைந்தது 7 ஐபிஎல் போட்டிகள் இங்கு விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் லக்னோ உரிமையாளரின் சொந்த மைதானமாகவும் இது இருக்கப் போகிறது.