உலகக் கோப்பையை வழங்கிய பிரதமர் மோடி:
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, நவம்பர் 19 ஆம் தேதி இந்த தொடர் முடிவுற்றது. முன்னதாக இந்த தொடரில் இந்தியா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மேலும், உலகக் கோப்பையை 6 வது முறையாக வென்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றது.
இச்சூழலில், ஆட்டம் முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கையால் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம் உலகக் கோப்பை வழங்கப்பட்டது.
இதன்பின்னர், ஓய்வு அறையில் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியாகி வைரலானது. மிட்செல் மார்ஷின் இந்த செயல்பாட்டிற்கு ஆதரவாகவும் , எதிர்ப்பு தெரிவித்தும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு:
இந்த நிலையில்தான், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் தேவ் என்ற சமூக செயற்பாட்டாளர் ஒருவர் உலகக் கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஸ் மீது இன்று (நவம்பர் 24) புகார் மனு அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மிச்சல் மார்ஸ் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புகார் மனுவின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த நபர் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அவர் கொடுத்துள்ள அந்த புகார் மனுவில், இந்திய ரசிகர்களின் மனதை புண்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முகமது ஷமி வேதனை:
இதனிடையே, உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியிருக்கிறார். இது தொடர்பாக இன்று பேசிய அவர், “உலகில் இருக்கும் அனைத்து அணிகளும் அந்த கோப்பையை வெல்லத்தான் போராடுகிறார்கள். தலை மீது ஏந்த வேண்டும் என நினைக்கும் கோப்பை அது. அந்த கோப்பை மீது காலை வைப்பது என்பது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
ஆனால், சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கோப்பையை வென்ற அந்த அணி கோப்பையை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்வார்கள். அது அவர்களின் விருப்பம். இந்த உலகில் எதுவும் புனிதமில்லை என்பது போன்ற கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.