IPL 2024 Retention trade: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் தொடர்:


இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்காக தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக 10 அணிகளின் உரிமையாளர்களும் ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை வெளியிட உள்ளனர். அதில் விடுவிக்கப்படும் வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெறும். அதேநேரம், ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்கள் டிரேடிங் அடிப்படையில் ஒரு அணியை சேர்ந்த வீரர்கள் வேறு அணி நிர்வாகத்தால் கைப்பற்றப்படுகின்றனர்.


டிரேடிங் அடிப்படையில் மஅணி மாறிய விரர்கள்:


அந்த வகையில் ஏற்கனவே சில வீரர்கள் அணி நிர்வாகங்களால் கழற்றிவிடப்பட்டுள்ளனர். சில வீரர்கள் டிரேடிங் அடிப்படையில் அணி மாறியுள்ளனர். உதாரணமாக. சர்பராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டே போன்றவர்கள் டெல்லி கேப்பிட்டல்ஸால் விடுவிக்கப்பட்டனர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஷாபாஸ் அகமது மற்றும் மயங்க் தாகரை டிரேடிங் அடிப்படையில் மாற்றம் செய்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தேவ்தத் பாடிக்கல்லும் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆவேஷ் கானும் மாற்றம்  கண்டுள்ளனர்.


எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிரேடிங்:


ஷ்ரதூல் தாக்கூர்:


நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஷ்ரதூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அடுத்த தொடருக்கான ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணி நிர்வாகத்தின் பர்ஸில் மிகவும் தேவையான இடத்தை இந்த முடிவு ஏற்படுத்தும்.


பிரித்வி ஷா:


கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்த தொடரில் அவர் தக்கவைக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியானது. ஆனால், பிரித்வி ஷாவை இந்த சீசனிலும் டெல்லி அணி தக்கவைத்துக் கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.


ஹர்திக் பாண்ட்யா:


நடப்பாண்டு டிரேடிங்கில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, மும்பை அணி 15 கோடி ரூபாயை வழங்குவதோடு, சில நட்சத்திர வீரர்களை விடுவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குஜராத் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டனையே மும்பை அணி, டிரேடிங் முறையில் வாங்குவது தான் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


டிரேடிங் செய்யப்பட்ட கேப்டன்கள்:


அதேநேரம், கேப்டன்களே டிரேடிங் முறையில் அணி மாறுவது என்பது ஐபிஎல் வரலாற்றில் புதியது அல்ல. ஏற்கனவே, 2019ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அஷ்வின், 2020ம் ஆண்டு தொடரின் போது டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரகானேவும் டெல்லி அணியால் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.