இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தான் அதிரடி ஆட்டம் ஆடியதற்கு என்ன காரணம் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக இந்திய அணி வீரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் என்ற கடின இலக்குடன் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் வான்டர் டுசன் 75 ரன்கள், டேவிட் மில்லர் 64 ரன்கள் விளாச 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே போட்டிக்குப் பின்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட டேவிட் மில்லர் தான் அதிரடி ஆட்டம் ஆடியதற்கு என்ன காரணம் என தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், அதிரடி ஆட்டம் ஆட கடின உழைப்பு தான் காரணம் என நினைக்கிறேன். கடந்த 4, 5 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை புரிந்து கொண்டு விளையாடி வருகிறேன். உண்மையில் விளையாட்டைப் புரிந்துகொண்டு வெற்றி பெறுவது உங்களுக்கு அதிக நம்பிக்கையைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உள்நாட்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியில் 4வது இடத்தில் களமிறங்கும் நான் இப்போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கி விளையாடியுள்ளேன். உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடனான தென்னாப்பிரிக்க அணியில் எந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும் மகிழ்ச்சி தான் என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, அணியின் செயல்பாட்டில் முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நேரம் ஆக ஆக விக்கெட் விழும் என எதிர்பார்த்தோம். ஆனால் மில்லர் தனது அதிரடி ஆட்டம் மூலம் வான்டர் டுசனுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தி கொடுத்தார்.
வான்டர் டுசன் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர் மெதுவாக தனது ஆட்டத்தை தொடங்கி கடைசியில் சரவெடியாய் வெடிக்கிறார் என பவுமா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்