சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ் போட்டி அது. வழக்கம்போல ரொம்பவே பரபரப்பாக அமைந்த போட்டி. இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. ரசிகர்களின் ஆரவாரமும் அதற்கேற்ற வகையில் கூடியும் குறைந்தும் சீரற்று காணப்பட்டது. என்ன நடந்ததென தெரியவில்லை. திடீரென ஒட்டுமொத்த மைதானமும் ஒரே குரலில் ஒரே சீராக ஆர்ப்பரிக்க தொடங்கியது. ஒரு மாஸ் ஹீரோ படத்திற்கான ரீரெக்கார்ட்டிங் செஷனுக்குள் நுழைந்ததை போன்ற ஒரு ஃபீலிங். அத்தன்னை கோரஸாக புல்லரிக்கும் வகையில் ஒரு கொண்டாட்டம் ரசிகர்களிடம் தென்பட்டது.




கேமராவின் கண்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெவிலியன் பக்கமாக திரும்புகிறது. இத்தனை ஆர்பரிப்பிற்குமான காரணம் புரிந்துவிட்டது. லிட்டில் மாஸ்டர்...மாஸ்டர் ப்ளாஸ்டர்...கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் கையில் மைக் பிடித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்களின் அளவிலடங்கா உற்சாகத்திற்கு இதுதான் காரணம். அவர் பேசி முடிக்கும் வரை சச்சின்...சச்சின் என்கிற அந்த மந்திர கோஷம் விண்ணை பிளந்திருந்தது. சச்சின் கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெற்று 3081 நாட்கள் அதாவது எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அந்த சச்சின்...சச்சின்...என்கிற பின்னணி இசை மட்டும் இன்னும் ஓயவில்லை. ஆழிப்பேரலையாக ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. சச்சின் மைக் பிடிக்கும் காலத்திலேயே இப்படி என்றால் சச்சின் பேட் பிடித்த காலத்தில் அவருக்கான வரவேற்பு எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.


 கிரிக்கெட்டின் மூலம் இந்த ஒட்டுமொத்த தேசத்திற்குமான முகமாக,  நம்பிக்கையாக, கொண்டாட்டமாக மாறிப்போனவர் சச்சின் டெண்டுல்கர். 


சச்சின் ஒரு மும்பைக்காரர். அதனால் மிக எளிதாக கிரிக்கெட்டிற்குள் நுழைந்துவிட்டார் எனும் பார்வை உண்டு. ஆனால், அது அப்படியில்லை. எங்கே அதிக கூட்டம் கூடுகிறதோ, அங்கேதான் அதிகமான போட்டிகளும் உருவாகிறது. மற்ற எந்த நகரத்தை விடவும் மும்பையில் கிரிக்கெட் பேட்களை ஏந்தும் கைகளும் கிரிக்கெட்டிற்கென்றே தங்களை  அர்ப்பணித்துக் கொள்ளும் ரொம்பவே அதிகமாக உண்டு. அங்கிருந்து அந்த நெருக்கடிமிக்க போட்டி சூழலிலிருந்து கூட்டத்தில் கரைந்துபோகாமல் முன்னேறி ஒருவன் 16 வயதிலேயே இந்திய அணியின் ஜெர்சியை அணிகிறான் எனில், அவன் சாதாரணமானவன் அல்ல.




சரித்திரங்களை படைக்கப்போவதற்கான தீர்க்கம் அவனிடம் இருந்திருக்கும். தன் தேசத்தை பெருமை கொள்ள செய்வதற்கான மாபெரும் கனவு அவனிடம் இருந்திருக்கும். சச்சின் அப்படியானவர்தான். கனவுகளை சுமந்துக்கொண்டு சரித்திரங்களை படைப்பதற்கான பசியோடு பேட்டை தூக்கியவர். அந்த பசிதான் அவருக்கான எரிபொருள். அதுதான் அவரை 24 ஆண்டுகள் ஓய்வில்லாமல் ஓடவைத்தது.


இந்த 24 ஆண்டுகளும் நூறுகோடி இந்தியர்களின் அன்றாடத்தில் கலந்துவிட்ட ஒரு உணர்வாகவே இருந்தார். சச்சின் நிற்கும் வரை இந்தியா வீழாது என நம்பினர். அதற்கான சாட்சிதான் அந்த 1996 களேபரம். 96 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்தியாவும் இலங்கையும் ஈடன் கார்டனில் மோதியிருந்தன. இலங்கை நிர்ணயித்த ஒரு 250+ டார்கெட்டை நோக்கி இந்தியா சேஸ் செய்தது. சச்சின் தொடக்க வீரராக இறங்கி மிகச்சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்திருப்பார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் 65 ரன்களிலேயே ஆட்டம் இழந்திருப்பார்.


சச்சின் அவுட் ஆகும்போது அணியின் ஸ்கோர் 98. எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் ஓவர்கள் இருக்கிறது. இன்னும் விக்கெட்டுகள் இருக்கிறது. ஆனால், குழுமியிருந்த ரசிகர்களிடம் நம்பிக்கை இல்லை. காரணம், சச்சின் அவுட் ஆகிவிட்டார்! ரசிகர்களின் அச்சப்படியே சம்பவங்கள் நிகழ்கிறது. 98-2 என்ற நிலையிலிருந்து மளமளவென விக்கெட்டுகள் சரிந்து 120-8 என வந்து நின்றது. தோல்வி உறுதியானது. ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தையே  கொளுத்த தொடங்கினர். போட்டி அத்தோடு முடித்து வைக்கப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் கருப்பு நாள் என இது குறிப்பிடப்படுகிறது. 




90 களின் இந்திய அணி அப்படித்தான் இருந்தது. சவாலளிக்கும் உத்வேகமேயின்றி போட்டி மனப்பான்மையே இன்றி தோற்றுக்கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் சல்லடையில் சலித்ததை போல ஒரு சில வீரர்கள் பெரும் தாகத்தோடும் கனவோடும் அணிக்காக போராடிக் கொண்டிருந்தனர். அதில் முதன்மையானவர் சச்சின். அடிமைப்பட்டு கிடந்த கூட்டத்திற்கு சுத்தியலோடு வந்து ஒரு ராக்கி பாய் நம்பிக்கையளித்ததை போல, சச்சின் பேட்டோடு வந்து நம்பிக்கை கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அறிமுக தொடரிலேயே சுற்றி முற்றி அத்தனை பேர் சொதப்பினாலும் எதிராளிகளை ஒற்றை ஆளாக நின்று சமாளிக்க முடியும் என காட்டியிருந்தார். வக்கார் யூனிஸ், இம்ரான் கான், வாசிம் அக்ரம் என அபாயத்தின் உச்சமாக கருதப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை திறம்பட சமாளித்து அந்த அறிமுக டெஸ்ட் தொடரிலேயே ஒரு சில அரைசதங்களை அடித்திருப்பார். அங்கிருந்தே இந்தியர்களின் மனங்களின் சச்சினின் மீதான நம்பிக்கை துளிர்விட தொடங்கியது. அந்த நம்பிக்கையை அவர் கடைசி வரை காப்பாற்றியிருந்தார். நின்று எத்தனை போட்டிகளை வென்றுக்கொடுத்தார் என தெரியாது. ஆனால், போட்டிகளை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே இந்திய ரசிகர்களின் எண்ணம் கிடையாதே!




முரட்டுக்காளைகளாக சீறிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான்களுக்கும் எப்போதும் உரசிக்கொண்டே இருக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக தலைநிமிர்ந்து கம்பீரத்தோடு இந்தியாவும் சண்டை செய்ய வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் பிரதான எண்ணம். அதை சச்சின் நனவாக்கி காட்டினார். இந்தியாவின் சார்பில் முன் வரிசையில் நின்று சமர் செய்தார். அவரை வீழ்த்தினால்தான் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார். அதாவது, ரசிகர்கள் விரும்பியதை போன்றே எதிர்த்து நின்று சண்டை செய்தார். அதனால்தான் ஒட்டுமொத்த தேசமும் ஒரே குரலில் சச்சின்...சச்சின் என அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இனியும் கொண்டாடும். எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருக்கும்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண