கிரிக்கெட் உலகில் டான் பிராட்மேனிற்கு பிறகு அனைவராலும் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்கள் இவரை அழைத்தனர். ஏனென்றால் களத்தில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் அவ்வளவு உள்ளன. 16 வயதில் ஒரு சிறுவன் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறான் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் உலகை ஆட்டி படைத்தார். கிரிக்கெட் உலகில் அவருடைய சாதனை பலவற்றை அடுத்து யார் முறியடிப்பார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று சச்சின் டெண்டுல்கர் 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் தன்னுடைய புதக்கத்தில் குறிப்பிட்டுள்ள சில சுவாரஸ்யமான சம்பவங்களை திரும்பி பார்ப்போம்.
1995ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய காதலி அஞ்சலியை திருமணம் செய்தார். அவருடைய திருமணத்திற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் எடை அதிகமாகியுள்ளார். இதன்காரணமாக 20 நாட்களில் மிகவும் கடினமான உணவு பழக்கத்தை கடைபிடித்துள்ளார். தினமும் வறுத்த கொண்டக்கடலை, ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். 20 நாட்களில் சுமார் 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.
டெண்டுலகருடைய கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் அவரை பின் தொடர்ந்து காயங்கள் தான். குறிப்பாக அவருடைய டென்னிஸ் எல்போ காயம் பல ஆண்டுகள் நீடித்தது. 2001ஆம் ஆண்டு ஜிம்பாவே தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்திற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. எனினும் அந்த ஸ்கேன் முடிவை இறுதிப் போட்டி முடியும் வரை தன்னிடம் தெரிவிக்க கூடாது என்று சச்சின் கூறியுள்ளார்.
2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் கை விரலில் காயத்துடன் விளையாடினார். அந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர் மருத்துவர்களிடம் தன்னுடைய உள்ளங்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று கூறியுள்ளார். அந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பாதி மயக்கத்தில் இருந்த சச்சின் தன்னுடைய கையை காட்டுமாறு மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அது அவருடைய பேட்டிங்கை பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்ததால் இதை கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக சச்சின் டென்னிஸ் எல்போ காயம் கண்டறியப்பட்டது. இருப்பினும் அப்போது அந்த காயத்தை அவர் இடமும் தெரிவிக்க கூடாது என்று கூறியிருந்தார். அதற்கு காரணம் என்ன என்று மருத்துவர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு சச்சின்,”ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை மிஸ் செய்வது என்னுடைய சொந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நான் மிஸ் செய்வது போன்ற ஒன்று” நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு அவருடைய டென்னிஸ் எல்போ காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் தொடரை மிஸ் செய்ததற்கு சச்சின் மிகவும் வருந்தி அழுததாக கூறப்படுகிறது.
சச்சின் டெஸ்ட் போட்டியில் எதற்காக வெள்ளை தொப்பி அணிந்தார் என்பதற்கு பின்னால் ஒரு முக்கியமாக கதை உள்ளது. இதை அவர் தன்னுடைய புத்தக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு சென்ற போது அவர் விமான நிலையத்தில் ஒரு க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். அதை பயன்படுத்திய போது அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய முகம் சற்று பெரிதாகியுள்ளது. மேலும் அவருடைய முகம் வெயிலில் படாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்காரணமாக அவர் டெஸ்ட் போட்டியில் வெள்ளை நிற தொப்பியை அணிந்து விளையாடியுள்ளார். அதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் ப்ளு தொப்பி அணிந்து விளையாடி வந்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு அவர் அதிகமாக வெள்ளை தொப்பியை பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய புத்தக்கத்தில் சில சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்