2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் எம்.எஸ் தோனியை ரன் அவுட் செய்து கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைத்தவர் மார்ட்டின் கப்தில். இவரின் இந்த ரன் அவுட்டால் உலகக் கோப்பை 2019 அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாடு திரும்பியது.
கப்தில் வீசிய இந்த த்ரோ சற்று விலகியிருந்தால், தோனி இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றிருப்பார். இருப்பினும், இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 வருடங்களை கடந்தும், 2019ல் தோனியை ரன் அவுட் செய்ததற்காக தற்போதும் இந்திய ரசிகர்கள் என்னை திட்டி மெயில் அனுப்பி வருகிறார்கள் என மார்ட்டின் கப்தில் பேசியுள்ளார்.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் கப்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, “அதெல்லாம் திடீரென்று நடந்தது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம், முதலில் பந்து மேலே செல்வதைப் பார்த்தேன். பின்னர்தான் அது என்னை நோக்கி வருகிறது என வேகமாக ஓடினேன். ஸ்டம்ப்களில் வீசுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் முயற்சித்தேன். அங்கிருந்து ஒன்றரை ஸ்டம்புகளைத்தான் பார்க்க முடிந்தது. அது ஒரு சரியான த்ரோவாக மாறியது எனது அதிர்ஷ்டம்.
இதன் காரணமாக இன்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் என்னைப் பிடிக்கவில்லை. தோனியை ரன் அவுட் செய்ததற்காக தற்போதும் இந்திய ரசிகர்கள் என்னை திட்டி மெயில் அனுப்பி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது அன்றைய நாளில்..?
2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 95 பந்துகளில் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 90 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் தோனி 72 பந்துகளில் 50 ரன்களும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களும் எடுத்து 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் இந்திய அணிக்கு பெற்று தந்தனர். 48வது ஓவரில் ஜடேஜாவை வெளியேற்றி டிரெண்ட் போல்ட் அசத்த, ஆட்டத்தின் 49வது ஓவரில், ஸ்கொயர் லெக் பகுதிக்கு தள்ளப்பட்டதை இரண்டு ரன்களாக மாற்ற தோனி முயற்சி செய்தார்.
அப்போது, மார்ட்டின் கப்திலின் வீசியா த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். 48.3 வது ஓவரில் இந்திய அணி ஸ்கோர் 216க்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதோடு மட்டுமின்றி தோனி விளையாடிய கடைசி (ஜூலை 10) சர்வதேச கிரிக்கெட் போட்டியும் இதுவே. அதற்குபிறகு தோனி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.