IND Vs AUS, Match Highlights: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. 20 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் சேர்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இதனால் இந்திய அணியின் கரங்களே தொடக்கம் முதல் உயர்ந்தவாறு இருந்தது. 


ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான ஸ்மித் மற்றும் மேத்யூவ் ஷார்ட் தலா 19 ரன்கள் சேர்த்த நிலையில் தங்களது விக்கெட்டினை இழந்தனர். அதன்பின்னர் வந்த இங்லிஷ் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது விக்கெட்டினை 2 ரன்னிலும் 12 ரன்னிலும் இழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணியின் வெற்றி 60% உறுதியானது. ஆனால் அதன் பின்னர் வந்த மார்கஸ் ஸ்டாய்னஸ் பொறுப்புடன் விளையாடினார். இவரது ஆட்டத்தினைப் பார்த்தபோது ஆஸ்திரேலியாவின் பேய் முகம் வெளிப்படுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவரும் தனது விக்கெட்டினை 25 பந்தில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 


அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறியதால் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவர்வரை களத்தில் நின்ற மேத்யூ வேட் மட்டும் பந்துகளில் ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியா அணி வெற்றியை எட்டமுடியாது என்ற நிலையை உணர்ந்த வேட் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி வித்தியாசம் பெருமளவு குறைக்கப்பட்டது. 


ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து  191 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்


 


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


அதன்படி இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் வரை களத்தில் நின்றது. இதில், 25 பந்துகள் களத்தில் நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகளை பறக்க விட்டார். மேலும், 2 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதம் எலிஸ் பந்தில் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதநேரம், டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களுக்குள் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.


பின்னர் வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஜோடியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்படி, 15 ஓவர்கள் முடிவின் படி இந்திய அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதிரடியாக அரைசதம் அடித்த இஷான் கிஷன் விக்கெட் இழந்தார். முன்னதாக கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற போட்டியிலும் அதிரடியாக அரைசதம் அடித்திருந்தார் இஷான் கிஷன்.


மேலும் இன்றைய போட்டியில் 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 52 ரன்களை குவித்தார். மறுபுறம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களை மிரட்டிக்கொண்டிருந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.


அந்த வகையில் 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அந்த வகையில், மொத்தம் 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.


அப்போது களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து 19 ரன்கள் எடுத்து நாதம் எல்லிஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், வந்த ரிங்கு சிங்கும் அதிரடியாக விளையாடினார்.


அந்த வகையில்,  பந்துகள் களத்தில் நின்ற ரிங்கு சிங் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை என மொத்தம் 31 ரன்கள் எடுத்தார். மறுபுறம் கடைசி ஓவரில் 1 சிக்ஸரை பறக்க விட்ட திலக் வர்மா 7 ரன்கள் எடுக்க இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்களை குவித்தது.