இந்திய கிரிக்கெட் அனியின் டைகர் என்று அழைக்கப்படுபவர்  மன்சூர் அலி கான் பட்டோடி. இவருடைய 80ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவர் கடந்து வந்த பாதை என்ன? இவர் உடைத்த தடைகள் என்னென்ன? 


மன்சூர் அலி கான் பட்டோடி ஜனவரி மாதம் 5ஆம் தேதி 1941ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாபலில் பிறந்தார். இவருக்கு சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.


பார்வை இழப்பு: 


1957ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயது முதல் பட்டோடி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி சிறப்பாக சென்றுகொண்டிருந்த இவருடைய கிரிக்கெட் பயணத்தில் 1961ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து பெரிய இடியாக அமைந்தது. அந்த விபத்தில் இவருடைய வலது கண் பார்வை கிட்டதட்ட பறிபோனது. 


இந்திய அணியில் அறிமுகம்: 


அந்த விபத்திற்கு பிறகு ஒரே ஒரு கண் பார்வையுடன் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். ஆறு மாதம் இடைவிடாத பயிற்சியின் மூலம் 1961ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்திய அணியில் இவர் இடம்பிடித்தார். டெல்லியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமாகினார். அந்தப் போட்டியில் இவர் முதல் இன்னிங்ஸில் 13 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 67 ரன்களும் அடித்தார். அதன்பின்னர் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் அடித்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 




21 வயதில் கேப்டன்:


இந்த ஆட்டத்திற்கு பிறகு அவர் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக மாறினார். இதன்காரணமாக 1962ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிக்கு இவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் இந்திய கேப்டனான நரி கான்டிராக்டருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தன்னுடைய 21 வயது இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் இருந்தார். அதில் குறிப்பாக நியூசிலாந்து மண்ணில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி இவருடைய கேப்டன்சியில் அமைந்தது. இவருடைய கேப்டன்சியில் இந்திய அணி 9 வெற்றி, 19 தோல்வி மற்றும் 19 போட்டிகளில் டிரா செய்துள்ளது. 


சாதனைகள்:


இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் 6 சதம் மற்றும் 2793 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 1962ஆம் ஆண்டு விஸ்டனின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்  வீரர் விருதை வென்றார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆவது இடத்தில் களமிறங்கி 554 பந்துகள் சந்தித்த ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். 


அரசியல் பிரவேசம்:


கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்விற்கு பிறகு பட்டோடி அரசியலில் குதித்தார். 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார்.