மகளிர் உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய மகளிரணி 155 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.




இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 317 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவும், ஹர்மன்பிரீத் கவுரும் சதமடித்து அசத்தினர். இந்த போட்டியில் சிறந்த வீராங்கனைக்கு வழங்கப்படும் ப்ளேயர் ஆப் தி மேட்ச் விருது ஸ்மிரிதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் இந்த விருதை இந்திய அணிக்காக சதமடித்த சக வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுரிடம் பகிர்ந்து கொள்வதாக கூறி, அவருடன் இந்த விருதை பகிர்ந்து கொண்டார். அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது முதல் 14 ஓவர்களிலே இந்திய அணி 78 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இருவரும் மிகவும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் ஆடி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.




இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 184 ரன்கள் குவித்தனர். இதன்மூலமாகவே இந்திய அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 317 ரன்களை எட்டியது. ஸ்மிரிதி மந்தனா 119 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 123 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 107 பந்துகளில் 10 பவுண்டரியுடன், 2 சிக்ஸர்களுடன் 109 ரன்களை எடுத்தார்.


இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் நல்ல ரன்ரேட் பெற்றுள்ளது. மேலும், இந்த போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி வீராங்கனை என்ற பெருமையை ஜூலன் கோஸ்வாமி பெற்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண