மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. 


இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. மூன்றாவது போட்டியில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது. 


ஸ்மிரிதி சுதாரித்து கொண்டு ஆடினார். 100 ரன்கள் எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. ஸ்மிரிதி மட்டும் ரன் சேர்த்து கொண்டிருக்க, அடுத்து களமிறங்கிய ஹர்மனும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் 123 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மிரிதி அவுட்டாகி வெளியேறினார். 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அசத்தினார் ஸ்மிரிதி.




தொடர்ந்து விளையாடிய ஹர்மன் ப்ரீத்கவுர் 109 ரன்கள் எடுத்தார். இவர் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்மிரிதி, ஹர்மனின் 184 ரன் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. இதனால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளுக்கு 317 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய மகளிர் அணி.


318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டியான்ட்ரா டாட்டின் மற்றும் ஹெய்லி மேத்யூஸ் களம் புகுந்து ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 13 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தது. இப்படியே தொடர்ந்தால் வெஸ்ட்இண்டீஸ் அணி எளிதாக வெற்றிபெற்று இருக்கும். 


சரியாக வெஸ்ட்இண்டீஸ் அணி 100 ரன்கள் எடுத்து இருந்தபோது, அதிரடியாக விளையாடிய டியான்ட்ரா டாட்டின் 62 ரன்களில் ரானா பந்துவீச்சில் அவுட் ஆனார். அதை தொடர்ந்து, பின்னால் வந்த 2 வீராங்கனைகளும் அடுத்தடுத்து வெளியேற, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் ஹெய்லி மேத்யூஸ் 43 ரன்களில் நடையைக்கட்டினார். 




அதன் தொடர்ச்சியாக பின்னால் வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற, வெஸ்ட்இண்டீஸ் அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண