அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சான் பிரான்ஸிஸ்கோ – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த சான் பிரான்ஸிஸ்கோ அணிக்காக ஃபின் ஆலன் – ஜேக் ப்ரெசர் களமிறங்கினர். ஜேக் பிரெசர் 18 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சஞ்சய் டக் அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த இங்கிலிஷ் ஒத்துழைப்பு அளிக்க ஃபின் ஆலன் அதிரடி காட்டினார்.


அதிரடி சதம் விளாசிய ஆலன்:


அவர் பவுண்டரிகளையும், சிக்ஸரும் விளாசிய அவரால்  பிரான்ஸிஸ்கோ அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. சிக்ஸர், பவுண்டரி மழை விளாசிய ஃபின் ஆலன் 53 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு சான் பிரான்ஸிஸ்கோ அணி ரன் எடுக்கத் தடுமாறியது.  13.4 ஓவர்களில் 149 ரன்களை எடுத்திருந்த பிரான்ஸிஸ்கோ அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.


201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெக்சாஸ் அணிக்கு கான்வே – கேப்டன் ஃபாப் டுப்ளிசிஸ் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். இருவரும் பவுண்டரி, சிக்ஸராக விளாசினர். குறிப்பாக, பாப் பவுண்டரிகளாக விளாசினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பாப் டுப்ளிசிஸ் கார்மி லே ரோக்ஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாச ஓங்கி அடித்தார்.


ஆட்டத்தை மாற்றிய ஆண்டர்சன் கேட்ச்:






அப்போது, அங்கே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் கோரி ஆண்டர்சன் அபாரமாக பாய்ந்து அந்தரத்தில் தனது இடது கையை நீட்டி கேட்ச் பிடித்தார். இதைப் பார்த்த டுப்ளிசிஸ் வியந்து போனார். இந்த அபார கேட்ச் ஆட்டத்தை மாற்றியது. அதன்பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை.


 


ஆரோன் ஹார்டி 19 ரன்களுக்கும், மிலிந்த் குமார் 2 ரன்னுக்கும், ஸ்டாய்னிஸ் 1 ரன்னுக்கும் ஆட்டமிழக்க கான்வே – ஜோசுவா அதிரடியாக ஆடினர். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. கான்வே 38 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், ஜோசுவா 36 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெக்சாஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சான் பிரான்ஸிஸ்கோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.


ஆட்டத்தை மாற்றியமைத்த கோரி ஆண்டர்சனின் கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.