இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களல் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்திய அணி முதலில் டி20 தொடரில் ஆடுகிறது. இந்திய அணி இலங்கை அணியுடன் தனது முதல் டி20 போட்டியில் இன்று ஆடுகிறது. இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.


இன்று இந்தியா - இலங்கை மோதல்:


இந்திய அணி இந்த டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன்கில், ஜெய்ஸ்வால், சாம்சன், ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ரியான் பராக், ஷிவம் துபே பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர். பந்துவீச்சாளர் முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங், பிஷ்னோய், கலீல் அகமது உள்ளனர்.


இந்திய அணியில் ஆடும் லெவனில் சாம்சன், ஷிவம் துபே, கலீல் அகமது, ரியான் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பதால் கலவையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கை பலம்:


இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் ஆடுவது பலமாக உள்ளது. அந்த அணிக்கு அசலங்கா கேப்டனாக உள்ளார். மெண்டிஸ், சனகா, பெர்னாண்டோ, குசல் பெரெரா, விக்ரமசிங்கே பேட்டிங்கில் பலமாக உள்ளனர். ஹசரங்கா, தீக்‌ஷனா, பதிரானா பந்துவீச்சில் பலமாக உள்ளனர்.


இலங்கை அணியுடன் ஒப்பிடும்போது இந்திய வீரர்களுக்கு டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் அதிகளவு உள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் ஆடும் இலங்கை அணி இந்தியாவிற்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கம்பீரின் முதல் தொடர்:


கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் போட்டி என்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்லேகேலேவில் நடைபெறும் இந்த போட்டி சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் இதுவரை 29 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.


இதில் இந்திய அணி இதுவரை 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. சொந்த மண்ணில் இந்திய அணி 13 போட்டிகளிலும், இலங்கை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். டி20 உலகக்கோப்பைத் தொடர் வென்ற பிறகு ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.