Rohit Sharma: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின், சில போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் கேப்டன் ரோகித் சர்மா விலகுவதாக கூறப்படுகிறது.


பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்:


நியூசிலாந்து அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடர் முடிந்தது, அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் 5 போட்டிகள் அடங்கிய, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான இரண்டு அணிகள் மோத உள்ள இந்த தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


பார்டர்-கவாஸ்கர் தொடரிலிருந்து ரோகித் விலகல்?


பிசிசிஐக்கு தெரிவித்த தகவல்களின்படி, தனிப்பட்ட காரணங்களால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான  முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார். நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து அடிலெய்டில் டிசம்பர் 6-10 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒரு போட்டியை ரோகித் தவறவிடக்கூடும். போட்டியிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லாத நிலையில், மிக முக்கியமான தனிப்பட்ட காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அந்த தனிப்பட்ட பிரச்னைக்கு முன்கூட்டியே தீர்வு கிடைத்தால், 5 போட்டிகளிலும் ரோகித் சர்மா பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.


ரோகித்துக்கு மாற்று யார்?


ஒருவேளை ஒரு டெஸ்ட் போட்டியை ரோகித் தவறவிட்டால், சுப்மன் கில் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர் வாய்ப்பை பெறலாம். அதேநேரம், உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், அபிமன்யு ஈஸ்வரனும் அணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.


இந்திய அணியின் துணைகேப்டன் யார்?


இந்திய அணி தற்போது விளையாடி வரும் வங்கதேச தொடரில், துணை கேப்டன் என யாரையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா தொடரின் போது நிச்சயம் ஒருவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு ஐபிஎல் அணி கேப்டன்களிடையே போட்டி நிலவுகிறது. அதன்படி, இளம் வீரர்களால சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரில் ஒருவர் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். குறிப்பாக, பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில், ஏற்கனவே இந்தியாவை வழிநடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.