பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் 310 பந்துகளில் முச்சதம் விளாசியதன் மூலமாக, இந்திய ஜாம்பவான் வீரேந்தர் சேவாக்கின் 20 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
சேவாக்கின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்:
முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி.
அதன்படி, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி நான்கு நாள் ஆட்ட நேர முடிவின் படி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் 322 பந்துகள் களத்தில் நின்று 23 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 317 ரன்கள் குவித்து முச்சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் சேவாக்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேவாக் 309 ரன்கள் விளாசியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி புரூக் தகர்த்திருக்கிறார்.
டெஸ்டில் பாகிஸ்தானில் ஒரு வெளிநாட்டு வீரர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
மார்க் டெய்லர் (ஆஸ்திரேலியா) 334*
ஹாரி புரூக் (இங்கிலாந்து) 317
வீரேந்திர சேவாக் (இந்தியா) 309
ராகுல் டிராவிட் (இந்தியா) 270
ஜோ ரூட் (இங்கிலாந்து) 262