ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லீசெஸ்டர்ஷயர் வீரர் லூயிஸ் கிம்பர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் முதல்தரப் போட்டிகளான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஆலி ராபின்சன் ஒரே ஓவரில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார்.


கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர்:


முதல்தர போட்டிகளில் ஒன்றான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் சசெக்ஸ் (sussex)மற்றும் லீசெஸ்டர்ஷயர் (leicestershire) அணிகளுக்கு இடையிலான போட்டி ஹோவில் உள்ள 1வது சென்ட்ரல் கவுண்டி மைதானத்தில் நடந்து வருகிறது.


ஒரே ஓவரில் 43 ரன்கள்:


இதில், ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது லீசெஸ்டர்ஷயர் வீரர் லூயிஸ் கிம்பர் சசெக்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ஆலி ராபின்சன் வீசிய ஒரு ஓவரில் 43 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.






ராபின்சன் தான் வீசிய ஓவரில், 3 பந்துகளை நோபாலாக வீசிய நிலையில், மொத்தமாக 9 பந்துகளை வீசினார். இதில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் ஒரு சிங்கிள் என மொத்தமாக 43 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார் ராபின்சன்.


குறிப்பாக நோ பால் ஆக வீசப்பட்ட 3 பந்துகளிலும் சிக்ஸர் விளாசி அசத்தி இருக்கிறார் கிம்பர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் கடைசி வரை களத்தில் நின்ற கிம்பர் 127 பந்துகளில் 243 ரன்களை குவித்தார். ஆட்ட நேரமுடிவில் சசெக்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, சர்ரே (Surrey) அணியின் அலெக்ஸ் டூடர் 1998 ஆம் ஆண்டு Lancashire அணிக்கு எதிரான போட்டியில், ஒரு ஓவரில் 38 ரன்களைக் கொடுத்ததே கவுண்டி கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் இந்த மோசமான சாதனை சமன் செய்யப்பட்டது.


Worcestershire அணிக்காக ஆடிய சோயிப் பாஷிரின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை அடித்து அசத்தி, 38 ரன்களை குவித்து பழைய சாதனையை சமன் செய்திருந்தார் சர்ரே அணியின் டேன் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Rohit Sharma Records: ஹிட்மேன்னா சும்மாவா.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி.. மன்னனாக மாறிய ரோஹித் ஷர்மா!


 


மேலும் படிக்க: T20 World Cup 2024: இந்தியா செய்த அந்த உதவி.. நன்றி மறக்காத ஆப்கானிஸ்தான்.. வாழ்த்திய தலிபான் அரசு!