Frank Duckworth: மழை போன்ற வானிலை காரணங்களால் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட்டால், முடிவுகளை அறிவிக்க ட்க்வர்த் லூயிஸ் முறை பின்பற்றப்படுகிறது.
ப்ராங்க் டக்வர்த் காலமானார்:
மழை போன்ற வானிலை காரணங்களால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க, டக்வர்த்-லூயிஸ் (பின்னர் டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன்) முறை பயன்படுத்தப்படுகிறது. அதனை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஃபிராங்க் டக்வொர்த், கடந்த வெள்ளிக்கிழமை ( ஜூன் 21ம் தேதி ) தனது 84 வயதில் காலமானார். டக்வொர்த் 2014 வரை ஐசிசியில் புள்ளியியல் ஆலோசகராக இருந்தார். டக்வொர்த் மற்றும் லூயிஸ் இருவருக்கும், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (MBE) உறுப்பினர் எனும் விருது வழங்கி வகவுரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ராங்க் டக்வர்த்தின் மறைவிற்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டக்வர்த் லூயிஸ் ஸ்டென் முறை:
ஆங்கிலப் புள்ளியியல் வல்லுநர்களான டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் ஆகியோரால் வகுக்கப்பட்ட அசல் முறையானது, 1997 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வானிலை காரணங்களால் பாதிக்கப்பட்ட விளையாட்டுகளில் திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிப்பதற்கான தரநிலையாக, ஐசிசியால் டக்வர்த் லூயிஸ் முறை 2001 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2014 இல், இது டக்வொர்த்-லூயிஸ் ஸ்டெர்ன் முறை என மறுபெயரிடப்பட்டது. காரணம் டக்வர்த் மற்றும் லூயிஸின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய புள்ளியியல் நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் இந்த அமைப்பில் மாற்றங்களைச் செய்தார் என்பதாகும்.
DLS முறைக்கான தேவை:
கடந்த 1992 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது, மழை குறுக்கிட்டதால் குறிப்பிட்ட விதி பயன்படுத்தப்பட்டு முடிவு காணப்பட்டது. இது பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு மாற்றாக கண்டறியப்பட்ட முறை தான் டக்வர்த் லூயிஸ் ஸ்டெர்ன் ஆகும்.
ஐசிசி இரங்கல்:
ஃப்ராங்க் டக்வர்த் மறைவு தொடர்பாக ஐசிசி கிரிக்கெட் செயல்பாடுகளின் பொது மேலாளர் வாசிம் கான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், "ஃபிராங்க் ஒரு சிறந்த புள்ளியியல் வல்லுநர், அவர் சகாக்கள் மற்றும் பரந்த கிரிக்கெட் சகோதரத்துவத்தால் மதிக்கப்பட்டார். அவர் இணைந்து உருவாக்கிய DLS முறை காலத்தின் சோதனையாக உள்ளது. மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். விளையாட்டிற்கு ஃபிராங்கின் பங்களிப்பு மகத்தானது மற்றும் அவரது மரணத்தால் கிரிக்கெட் உலகம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.