நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடக்க ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் அணியை வென்ற ஆசியா லயன்ஸ் அணி கேப்டன் சயீத் அப்ரிடி மகிழ்ச்சியை பரிமாறும்போது பெண் அம்பயரை கட்டிப்பிடிக்க சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.


பெண் நடுவரை கட்டிப்பிடிக்க சென்ற அஃப்ரிடி


தற்போது நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் (எல்எல்சி மாஸ்டர்ஸ்) தொடக்க ஆட்டத்தில் ஆசியா லயன்ஸ் அணி இந்தியா மகாராஜாஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. வெற்றி பெற்ற அணியின் கேப்டனாக இருந்த சயீத் அப்ரிடி தனது அணியின் வெற்றியை மகிழ்ச்சியுடன் வீரர்களை கட்டியணைத்து கொண்டாட, ஹர்பஜன் சிங்கைக் கட்டிப்பிடித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டார். உடனே ஒரு குழப்பத்தில், அணி வீரர் என்று நினைத்து அருகில் நின்ற பெண் நடுவரைக் கட்டிப்பிடிக்க சென்று, பின்னர் உணர்ந்து பின்வாங்கிக் கைகுலுக்கிய இந்த வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.






மிஸ்பா உல் ஹக் அற்புதமான இன்னிங்ஸ்


இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக்கின் அற்புதமான இன்னிங்ஸால் ஆசியா லயன்ஸ் வெற்றியுடன் தொடரை சிறப்பாகத் தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆசியா லயன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் திலகரத்ன டில்ஷான் மற்றும் அஸ்கர் ஆப்கானின் விக்கெட்டுகளை விரைவாக இழந்து அழுத்தத்தில் இருந்தது. இருப்பினும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா 39 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவர்களை மீட்டார், ஆனால் அதன் பின்னர் மிஸ்பா உல் ஹக் தான் அணியை வெற்றிபெறும் இலக்கை எட்ட வைத்தார்.


தொடர்புடைய செய்திகள்: Shubman Gill Six: வாவ்... சுப்மன்கில் சிக்ஸால் பந்தே காணாம போச்சு..! கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்த ரசிகர்..!


சோர்ந்து போன இந்திய பந்துவீச்சு


48 வயதான அவர் 50 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார் மற்றும் அவரது ஆட்டத்தால் ஆசியா லயன்ஸ் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்த சயீத் அப்ரிடி தனது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கினாலும் பெரிய ரன்னுக்கு செல்ல முடியவில்லை. இதற்கிடையில், போட்டியின் போது இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் சுமாராகவே பந்து வீசினர், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் பர்விந்தர் அவானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், வயதானதால் வீரர்கள் சோர்வடைவது போல் தோன்றியதால், பந்துவீச்சில் போதுமான வீச்சு இல்லை.



சொதப்பிய இந்திய அணி பேட்டிங்


பேட்டிங்கைப் பொறுத்தவரை, கேப்டன் கவுதம் கம்பீர் நன்றாக செயல்பட்டாலும், வேறு எந்த வீரரும் அவருக்கு உதவவில்லை. கம்பிர் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக அதிக ரன் எடுத்த ஒரே வீரர் முரளி விஜய்தான், அவர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் சமீபத்தில் ILT20 இல் விளையாடியதிலிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன, ஆனால் அவர்களில் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சோஹைல் தன்வீர், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, இறுதியில் லயன்ஸ் வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிஸ்பா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.