முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் பங்கேற்றுள்ளார். இவர் லக்னோவிலுள்ள நட்சத்திர ஓட்டலில் ஒன்றில் தங்கியுள்ளார். 


 


இந்நிலையில் மிட்சல் ஜான்சன் தன்னுடைய ஓட்டல் அறைக்கு பாம்பு ஒன்று வந்தது தொடர்பான பதிவை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு நிற பாம்பு ஒன்று அவருடைய ஓட்டல் அறைக்குள் இருக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தை பதிவிட்டு, “இது எந்த வகை பாம்பு என்பது யாருக்காவது தெரியுமா?.. என்னுடைய ஓட்டல் அறைக்கு வந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 


 






அவரின் இந்தப் பதவிற்கு கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து மிட்சல் ஜான்சன் மேலும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அந்தப் பாம்பின் தலை தெளிவாக தெரியும்படி படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்த பாம்பின் தலை தெரியும் வகையில் இந்தப் படம் உள்ளது. எனினும் தற்போது வரை இது எந்த வகை பாம்பு என்று எனக்கு தெரியவில்லை. லக்னோவில் தங்கியுள்ளது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.









ஆஸ்திரேலிய அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் 2007ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். இவர் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்களை எடுத்துள்ளார். அத்துடன் 153 ஒருநாள் போட்டியில் விளையாடி 239 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.