ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மொஹாலியில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணியின் வீரர்களும் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் தொடர்பான முன்னோட்ட நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பங்கேற்று பேசினார். அதில், “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வெல்லவில்லை என்றால் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் வெல்வது கடினம.
ஏனென்றால் எந்த ஒரு பெரிய கிரிக்கெட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்காமல் வெல்ல முடியாது. 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தோம். அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தோம். 2015 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்தோம். ஆகவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்:
செப்டம்பர் 20- முதல் டி20 போட்டி
செப்டம்பர் 23- இரண்டாவது டி20 போட்டி
செப்டம்பர் 25- மூன்றாவது டி20 போட்டி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் இத்தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் மாற்று வீரராக உமேஷ் யாதவ் களமிறங்க உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின்பு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:
செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி
அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி
அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி
அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி
அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி
அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.