இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் யார் விளையாடுவார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. 


இந்நிலையில் முதல் டி20 போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, “தொடக்க ஆட்டக்காரராக நான் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக என்னுடைய ஸ்டிரைக் ரேட் தொடர்பாக நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு பேட்ஸ்மேன் எப்போதும் ஒரே ஸ்டிரைக் ரேட் வைத்து ஆடியதில்லை. 


எனினும் அதில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து அனைவரும் விளையாடி வருகிறோம். மேலும் எங்களுடைய அணியில் அனைவரும் தவறு செய்து கற்று கொள்ளும் சூழல் உள்ளது. இதனால் இவர்கள் அவர்களுடைய தவறுகளில் இருந்து எளிதாக கற்றுக் கொண்டு வருகின்றனர். உலகக் கோப்பை தொடருக்கு தற்போது நாங்கள் 80-85 சதவிகிதம் தயாராக உள்ளோம். இன்னும் ஒரு சில இடங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். ஒரு பெரிய தொடரை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் இவை அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். 


 






ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் என்பதை போட்டியின் ஆடுகளம், எதிரணியின் பலம் மற்றும் சூழல் ஆகியவற்றை பொறுத்தே முடிவு செய்ய முடியும். இது மிகவும் கடினமான முடிவாக தான் இருக்கும். ஏனென்றால் இருவரும் அணியின் சிறந்த வீரர்கள். இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பது போட்டியின் போது எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு சில போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்தவில்லை. எனினும் ஜடேஜா காயம் காரணமாக அணியில் இடம்பெறாத சூழலில் இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது. எனினும் ஒரு சிலர் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் அணியில் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவதால் 4 பந்துவீச்சாளர்களுடன் ஹர்திக் பாண்ட்யா 5வது பந்துவீச்சளராக இருப்பார் என்று தெரிவித்து வருகின்றனர்.


டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.